பக்கம் எண் :

1075
 
2821.மூவாதி யாவர்க்கும் மூத்தான் தன்னை

முடியாதே முதல்நடுவு முடிவா னானைத்

தேவாதி தேவர்கட்குந் தேவன் தன்னைத்

திசைமுகன்றன் சிரமொன்று சிதைத்தான் தன்னை

ஆவாத அடலேறொன் றுடையான் தன்னை

அடியேற்கு நினைதோறும் அண்ணிக் கின்ற

நாவானை நாவினில்நல் லுரையா னானை

நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

3


3. பொ-ரை: யாவர்க்கும் முன்னே தோன்றி வைத்தும் மூப்பு இன்றி என்றும் ஒருபெற்றியனாய் உள்ளவனும், தேவர்கட்குத் தலைவராகிய நான்முகன், திருமால், இந்திரன் ஆகியோருக்கும் தலைவனாய்த் திகழ்பவனும், நான்முகனுடைய சிரங்களில் ஒன்றைக் கொய்தவனும், காற்றெனக் கடிதியங்குவதும் வெற்றியையுடையது மாகிய ஆனேற்றை ஊர்தியாக உடையவனும், ஆகி, அடியேன் நினையுந்தொறும் நாவான் நுகரப்படும் தித்திப்பாகும் சுவையாகவும், நாவிற்பயிலும் நல்லுரையானாகவும் விளங்கும் சிவபெருமானை நாரையூராம் நன்னகரில் நான் கண்டேன்.

கு-ரை: மூவாது மூத்தல் - 'தோன்றுவனவற்றிற் கெல்லாம்முன்னே தோன்றினான்' என்னுமாறு காலம்பற்றி வரும்பிற பொருள்களினது தோற்றம் போல்வதொரு தோற்றத்தால் மூத்தவனாகாது, இயல்பாக என்றும் உளனாதல், இவ்வாறுஈண்டு அருளிச்செய்த இதனால், "முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி" (ப.19 பா.1) என்றாற்போல அருளிச்செய்தவற்றின் உண்மைப்பொருள் இது வென்பது இனிது விளங்கும். முடியாது - அழியாமல்; ஏகாரம் தேற்றம். மூவாது மூத்தமையின், முடிதல் இல்லையாயிற்று. 'தான் இங்ஙனம் மூவாது மூத்து முடியாது நின்று, பிற பொருள்கட்கெல்லாம் முதலும் நடுவும் முடிவும் ஆயினான் என்க. தே ஆதி தேவர்- தேவர்களுக்குள் ஆதிதேவர்; காரணக் கடவுளர்; அயனும், மாலும்; 'தே' என்பது, சொல்லால் அஃறிணையாதலின், ஒருமைபன்மை இரண்டிற்கும் பொதுவாய், ஈண்டுப் பன்மைப்பொருள் தந்தது. உம்மை, சிறப்பு, "ஆ" என்றதனை, "ஏறு" என்றதனோடு இயைத்து, "ஆனேறு" என்று பொருள்கொள்க. வாதம் - காற்று; 'காற்றுப்போலும் கடுநடையை உடைய ஏறு' என்க. அண்ணித்தல் - தித்தித்தல். "நா" என்றது, அதன் புலமாகிய சுவையை; அது தித்திப்பை உணர்த்திற்று.