பக்கம் எண் :

1079
 

தோன்றும் உடம்பிற் கட்டுண்டு, குறித்த தொன்றாக மாட்டாக்குறையுற்று, எடுத்த உடம்பின் ஆற்றலளவிற்கேற்ற அறிவுஇச்சை செயல்களையே உடையராய், உண்டு, உறங்கி, 'பசி,பிணி, மூப்பு' முதலியன காலவயத்தான் ஒருதலையாக வந்துபற்ற, அவற்றைத் தவிர்க்க மாட்டாது தாங்கி, இடையே இன்பத் துன்ப நுகர்ச்சியால் விருப்பு வெறுப்புக்கள் மீதூர. உறவும் பகையும் கொண்டு நல்லன தீயன வற்றைச் செய்து இறப்பவர் பிறப்பின்கண் அழுந்துவோரும், அவ்வா றன்றி வேண்டிய உருவத்தை வேண்டியவாறே தமது இச்சையால் தோற்றுவாய் யாதுமின்றிக் கொண்டு இம்மெனக்கடிதில் தோன்றி, அத்தோற்றத்திற்குப் பயனாம்செயல் கடிதின் முடிய, இம்மெனக் கடிதின் மறைபவரே பிறவியின்கண் அழுந்துவாரை அதனினின்றும் எடுப்போரும்ஆவர் எனல் வேண்டும். அவ்வாறன்றி, வினைவயப்பட்டுநிற்கும் மேற்கூரிய பிறவியுடையார்க்கு அவர் அவ்வுவமை கூறுதல் பொருந்தாமையின் என்க. எனவே, உயிர்களின் பொருட்டு வேண்டிய உருவத்தை வேண்டியாங்குத் தோற்றுவாய் இன்றித் தனது இச்சையின் வழி அருளால் திருமேனிகொள்ளுதலுக்கு அஃது உவமையாம் அன்றி, உயிர்கள்வினையிற் கட்டுண்டு அதனால், நால்வகைத் தோற்றத்துட்பட்டுமாயா சரீரமாகிய பிறவி எடுத்தற்கு அஃது உவமை ஆமாறில்லை என்க. இதனானே, 'பிறவியாவது இது' வெனவும், 'அருள் தோற்றமாவது இது' வெனவும் வேற்றுமை தெரிந்து, 'பிறவி', மலமுடைய உயிர்கட்கு அன்றி நின்மலனாகிய இறைவற்கு ஒருவாற்றானும் ஒரு ஞான்றும் எய்துதல் இல்லை' எனவும், அஃது எய்தாமை பற்றி அவன் உயிர்களின் பொருட்டு அருட்டிருமேனி கொள்ளுதற்குத் தடை ஒன்றும் இல்லை எனவும், அதனால் நின்மல னாகிய இறைவனை எவ்வாற்றானும் மலமுடைய உயிர்க்கு உரிய பிறவியுடையனாகக் கருதுதலும், சொல்லுதலும் அவனுக்குப் பெரிய தோர்இழுக்குச் செய்தலாம் எனவும் கடைப்பிடித்து உணர்ந்துகொள்க.

'பித்தன்' என்றது, ஓர் வரையறையின்றித்தான் வேண்டியது செய்வன் என்னும் கருத்தினதாய்,அவனது தன்வயமுடைமையைப் பழித்ததுபோலப் புகழ்ந்ததாம்.

இந்நிலை, 'செய்தல் (கர்த்திருத்துவம்), செய்யாமை (அகர்த்திருத்துவம்), வேறொன்று செய்தல்(அந்யதாகர்த்திருத்துவம்)' என மூன்றாய் விளங்கும்; இவற்றை,