பக்கம் எண் :

1080
 
2825.தக்கனது வேள்விகெடச் சாடி னானைத்

தலைகலனாப் பலியேற்ற தலைவன் தன்னைக்

கொக்கரைசச் சரிவீணைப் பாணி யானைக்

கோணாகம் பூணாகக் கொண்டான் தன்னை

அக்கினொடும் என்பணிந்த அழகன் தன்னை

அறுமுகனோ டானைமுகற் கப்பன் தன்னை

நக்கனைவக் கரையானை நள்ளாற் றானை

நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

7


"ஒன்றை நினைக்கின்அதுவொழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்"

என (நல்வழி) விளக்கினார், ஒளவையார்.

வனம் - காடு. "உள்ளான்" என்றது, 'கலந்து நிற்பவன்' என்றபடி, "உறவானைப் பகையானை" என்றது, 'உயிர்கள் தமக்கு உறவாக நினைக்கப்படுபவராயும், பகையாக நினைக்கப்படுபவராயும் நிற்பவன் அவனே' என்றவாறு, உள்ளான் புறத்தான் - எல்லாப் பொருள்களின் உள்ளும் புறமும் நிறைந்துள்ள வியாபகன். ஓசை, பூதங்களுட் சிறந்த விசும்பின் பண்பாகலின், அதனை எடுத்தோதியருளினார். நறவு - தேன்.

7. பொ-ரை: தக்கனது வேள்வியை அதன் பயன் கெடுமாறு அழித்தவனும், பிரமனது தலையைப்பாத்திரமாகக் கொண்டு பிச்சை ஏற்ற தலைவனும், கொக்கரை, சச்சரி, வீணை ஆகிய இசைக்கருவிகளை வாசிக்கும் கரத்தினனும், உயிரைக் கொள்ளுதலையுடைய நாகத்தை அணியாகப் பூண்டவனும், உருத்திராக்கம் என்பு இவற்றை அணிந்த அழகனும், ஆறுமுகன், ஆனைமுகன் ஆகிய இருவருக்கும் தந்தையும், ஆடை அணியாதவனும், வக்கரைநள்ளாறு என்னுந் தலங்களில் திகழ்பவனும் ஆகியசிவபெருமானை நாரையூராம் நன்னகரில் நான் கண்டேன்.

கு-ரை: சாடினான் - அழித்தான். சச்சரி, ஒருவகை வாச்சியம். அக்கு - சங்குமணி. நக்கன்- உடையில்லாதவன்; இது பிட்சாடன கோலத்தை நோக்கி அருளியது. இனி 'பற்றற்றவன்' என்ற உண்மைப் பொருளும் உடையது என்க. வக்கரை, தொண்டை நாட்டுத்தலம். நள்ளாறு, சோழநாட்டுத் தலம்.