கு-ரை: நஞ்சை வைத்ததனால் ஆகியநீலநிறம், செம்மேனியனாகிய சிவபிரானுக்குக் கண்டத்தை நீலமணிபோல அழகு செய்து நிற்றலின், "ஆலாலம்மிடற்று அணியா அடக்கினான்" என்று அருளிச் செய்தார். 'பால் முதலியவுமாகி, அவற்றின் சுவைகளும் ஆயினான்' என்க. உம்மை, எச்சம். வேதியருள் மேலாவார். "எரியலால் உருவம் இல்லை....ஐயன் ஐயாறனார்க்கே" (தி.4. ப.40.பா.5.) என்று அருளியவாறு, எரி, சிவபிரான் உருவேயாதலையறிந்து வேட்பவரே யாகலின், 'மேலாய வேதியர்க்குவேள்வி யாகி' என்று அருளினார்; "விருப்புறும் அங்கியாவார் விடை உயர்த் தவரே" (தி.12 பெ. புரா. திருஞா.1241) என்று திருஞானசம்பந்தர் சிந்தையில் தெளிந்தமைஅறிக. இக்கருத்தினையும், மற்றும்பகலவனையும் சிவபிரானது உருவாகவே அறிந்து காலை,மாலை, நண்பகற் பொழுதுகளில் வழிபடுதலே உண்மைப்பொழுது வழிபாடு (சந்தியாவந்தனம்) என்பதனையும் சுவாமிகள் "எரிபெ ருக்குவர் அவ்வெரி ஈசன துருவ ருக்கம தாவ துணர்கிலார்" எனவும், "அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில் அருக்க னாவான் அரன்உரு அல்லனோ" எனவும் அருளிச்செய்தார்கள். (தி.5 ப.100 பா.7,8) இதனானே, காயத்திரி மந்திரத்தின் பொருளும் சிவபிரானே என்பதும் தெளியப்படும்; இதனை, "உயர்காயத்திரிக்கு உரிப்பொருளாகலின் என்னும் பொருளதாக வடமொழியில் ஓதினார், அரதத்தாசாரியர். ஆகவே, திருவைந்தெழுத்தின் பொருளே காயத்திரியின் பொருளாக அறிதலும், அதனால் திருவைந்தெழுத்தினையே முதற்றிருமந்திரமாக உணர்ந்து ஓதுதலும் மேலாய வேதியர்க்கு உரியனவாதல் விளங்கிற்று. இதனை, "செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு அந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே" (தி.3. ப.22. பா.2.) என இனிது விளங்க அருளிச்செய்தார். திருஞான சம்பந்த சுவாமிகள். இவ்வருளிச் செயலைச் சேக்கிழார் சுவாமிகள்,
|