பக்கம் எண் :

1084
 
"மந்திரங்க ளானஎலாம் அருளிச் செய்து

மற்றவற்றின் வைதிக நூற் சடங்கின் வந்த

சிந்தைமயக் குறும்ஐயம் தெளிய எல்லாம்

செழுமறையோர்க் கருளிஅவர் தெளியு மாற்றால்

முந்தைமுதல் மந்திரங்கள் எல்லாம் தோன்றும்

முதலாகும் முதல்வனார் எழுத்தஞ் சென்பார்

அந்தியினுள் மந்திரம்அஞ் செழுத்து மேயென்று

அஞ்செழுத்தின் திருப்பதிகம் அருளிச் செய்தார்"

(தி.12 பெ. பு. திருஞா. 266.)

என விரித்தோதியருளினார்.

இவ்விரிவினுள் "வைதிகநூற்சடங்கு"என்றது, "எரி பெருக்குவர்" எனவும், "அருக்கன்பாதம் வணங்குவர் அந்தியில்" எனவும் மேற்காட்டியசுவாமிகள் திருமொழியுட் குறிக்கப்பட்டவற்றைஎனவும், "அச்சடங்கினால் வந்த சிந்தை மயக்குறும்ஐயம்" என்றது, எரியையும் அருக்கனையும் அன்னபிறவற்றையும்சிவபிரான் உருவாக அறியாது பிறவாறு மயங்கிக்கொள்ளுதலைஎனவும், "அவ்வையமெல்லாம் தெளிய அருளி' என்றது,எரி ஈசனது உருவருக்கமே என்றும், அருக்கனாவான்அரனுருவே என்றும், பிறவும் அன்ன என்றும் இவ்வாறு தெளிவித்தருளினமையைஎன்றும் நாயனார் திருமொழியோடு கூட்டி உணர்ந்துகொள்க.

இதனானே, திருஞானசம்பந்தரது தொகைத்திருமொழிகட்கு நாயனார் திருமொழி விரியாகநின்று விளக்கந்தந்தருளுதலையும், அவ்விளக்கத்தின்வழிநின்றே சேக்கிழார் விளக்கம் தந்து செல்லுதலையும்அறியலாகும்.

இவ்வாற்றால் எரியைச் சிவபிரான்உருவருக்கமாக உணராது, எல்லாத் தேவர்கட்கும்அவரவர்க்கும் உரிய அவியைச் சுமந்து சென்றுகொடுக்கும் ஒரு தேவனது உருவாகவும், பிறவாறும் கொண்டுவேட்டல் வேட்பித்தல்களைச் செய்வோரும்,அவ்வாறே பகலவன் வழிபாடு முதலியவற்றைப் பிறவாற்றாற்செய்வோரும் மேலாய வேதியர் ஆகாமை பெறப்பட்டது.இம்மேலாய வேதியர் ஆகாதாரைத் திருமூல நாயனார்,"பேர்கொண்ட பார்ப்பான்" (தி.10 திருமந்திரம்- 519) என்று அருளிச்செய்தார். இன்னோரன்ன அருமைத்திருமொழிகள் பலவற்றான், "வாழ்க அந்தணர் வானவர்ஆனினம்" (தி.3. ப.54. பா.1.) என்புழி. "அந்தணர்"எனஅருளிச் செய்யப்பட்டவரும், திருமுறையும்பிறவுமாகிய சைவநூல்களுள் 'அந்தணர்' எனப்போற்றப்படுவோரும் இன்னர் என்பது ஐயமற விளங்கும்.