பக்கம் எண் :

1085
 
2828.மீளாத ஆளென்னை உடையான் தன்னை

வெளிசெய்த வழிபாடு மேவி னானை

மாளாமை மறையவனுக் குயிரும் வைத்து

வன்கூற்றி னுயிர்மாள உதைத்தான் தன்னைத்

தோளாண்மை கருதிவரை யெடுத்த தூர்த்தன்

தோள்வலியுந் தாள் வலியுந் தொலைவித் தாங்கே

நாளோடு வாள்கொடுத்த நம்பன் தன்னை

நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

10

திருச்சிற்றம்பலம்


ஈண்டு, "மேலாய வேதியர்" என்றதில், மேலாயஎன்னும் அடையை, பிறிதின் இயைபு நீக்கிய விசேடணமாகக் கொண்டு 'வேதியருள் மேலாய வேதியர்' எனவும், இயைபின்மை நீக்கிய விசேடணமாகக் கொண்டு, 'மக்களுள் மேலாயவேதியர்' எனவும் எவ்வாறுரைப்பினும் மேற்கூறிய எல்லாம் பொருந்துமாறு அறிந்து கொள்க.

இனி, மேலாய வேதியரால் வேட்கவும் வேட்பிக்கவும்படும் வேள்விகள் அப்பொழுதேயாயினும், வழிமுறைக்கண் ஆயினும் சிவபிரானை அடைவிக்கும் ஆகலின், அவனை அவ்வேள்விகளின் பயன் என்று அருளிச்செய்தார். இச் சைவநெறி, வைதிக நெறிக்குச்சிறிதும் மாறானது அன்றென்பது உணர்த்து தற்பொருட்டு, "நாலாய மறைக்கிறைவன் ஆயினான்" என்று அருளினார்.

10. பொ-ரை: விட்டுப்பிரியாத அடிமையாக என்னை உடையவனும், அறிவு ஒன்றிச் செய்தவழிபாட்டை விரும்புபவனும், மார்க்கண்டேய மறையவனுக்கு ஒருகாலும் மாளாதவாறு உயிரளித்து வலியகூற்றின் உயிர் நீங்கும் வண்ணம் உதைத்தவனும், தன்தோள் வலிமையை மதித்துக் கயிலை மலையை எடுக்க முயன்றகாமுகனாகிய இராவணனுடைய தோள்வலியும் முயற்சி மிகுதியும்கெடச் செய்து, அவன் தன்னை உணர்ந்த அப்பொழுதே அவனுக்கு மிகுந்த வாழ்நாளையும் வாளையும் வழங்கிய தலைவனும் ஆகிய சிவபெருமானை நாரையூராம் நன்னகரில்நான் கண்டேன்.

கு-ரை: "ஆள்" என்பதில், 'ஆக' என்பது விரித்து. 'என்னை மீளாத ஆளாக உடையான்' என உரைக்க. வெளி - ஒளி; அறிவு; அது சிவபிரானையே. முதல்வனாக அறிவது. 'வெளியோடு செய்த வழிபாடு' என்க.