பக்கம் எண் :

1088
 

கு-ரை: சொல் மலிந்த -சொற்கள் நிறைந்த; என்றது, சொல்வடிவாய் நிற்கும்' என்றபடி. "சொற்பொருள்" என்றது, சொற்பொருள் உணர்வை; அதுவே நாதமாதலின், 'அதனைக்கடந்த' என்றது, 'நாதத்தைக் கடந்த' என்றவாறாயிற்று. "சுடர்" என்றது கதிர்களையும், "சோதி" என்றது அக்கதிர்களின் திரட்சியையும். நாதந்தானே உயிர்களின் அறிவை விளக்கி அவ்வறிவாய் நிற்றலின், 'அதனைக் கடந்த சுடர்ச் சோதி' யாதலாவது, அதுபோல விளக்குவதொரு பொருளை வேண்டாது, தானே இயல்பாய்விளங்கி நிற்கும் அறிவாதலாம். ஆகவே, "சொன்மலிந்தநான்மறை ஆறங்கம் ஆகிச் சொற்பொருளும் கடந்தசுடர்ச் சோதி" என்றது, 'தான் இயல்பாகவேவிளங்கும் இயற்கை யுணர்வினனாய் நின்று, நாதத்தைச்செலுத்தி, அது வாயிலாக உயிர்களின் அறிவை விளக்கிநிற்பவன்' என்றருளியவாறாதல் அறிக. "உய்யஎன் உள்ளத்துள் ஓங்காரமாய் - நின்ற மெய்யா" (தி.8திருவா. சிவ புரா. 33 - 34) என்றாற்போலுந் திருமொழிகள் இதனையே குறிக்கும் என்க.

சமட்டியாய் (தொகுதியாய்) நிற்கும்ஓங்காரம் வியட்டியில் (பகுதியில்) 'அகாரம், உகாரம், மகாரம், விந்து, நாதம்' என ஐந்தாய் உயிர்களின்அறிவை விளக்கும்; அவை அங்ஙனம் விளக்கும்படி அவற்றை இறைவன் ஐவகை நிலையில் நின்று செலுத்துமாற்றினை,

"அகார உகாரம் அகங்காரம் புத்தி
மகாரமனம் சித்தம் விந்துப் - பகாதிவற்றை
நாதம் உளவடிவா நாடிற் பிரணவமாம்
போதம் கடற்றிரையே போன்று"

எனவும்,

"எண்ணில வோங்காரத் தீசர்சதாசிவமாம்
நண்ணிய விந்துவொடு நாதத்துக் - கண்ணிற்
பகரயன்மா லோடு பரமனதி தெய்வம்
அகரஉக ரம்மகரத் தாம்"

எனவும் விளக்கியது சிவஞானபோதம். (சூ. 4 அதி.1)

ஓங்காரம் பருப்பொருளாக மேற்கூறியஐந்து பகுதிகளாக (பஞ்சகலைகளாக)ப் பகுக்கப்படுதலே பெரும்பான்மை; மற்றும் அதனை மிக நுட்பமாகப் பன்னிரண்டு பகுதிகளாகவும், பதினாறு பகுதிகளாகவும் பகுத்து, யோகநெறியில் அவைகளை உன்னி உணர்ந்து அவற்றின் நீங்கும் முறையும்