பக்கம் எண் :

1098
 
2839.செறிகொண்ட சிந்தைதனுள் தெளிந்து தேறித்

தித்திக்குஞ் சிவபுவனத் தமுதம் போலும்

நெறிகொண்ட குழலியுமை பாக மாக

நிறைந்தமரர் கணம்வணங்க நின்றார் போலும்


'இளைக்கின்றேனைக் கூவி ஏறவாங்கி இப்பிறவி அறுத்து அமர் உலகு அனைத்தும் உருவி ஆங்கேபோக ஆண்டுகொண்டார்' எனக் கொண்டு கூட்டியுரைக்க. கூவி - அழைத்து. ஏற வாங்கி - கரை ஏறும் படி எடுத்து. இப்பிறவி அறுத்து - பிராரத்தத்தை நுகர்ந்து இப்பிறவியைத் தொலைத்தபின்பு. அமர் உலகு அனைத்தும் உருவி - விண்ணவர் உலகம் எல்லாவற்றையும் தாண்டி. ஆங்கே போக - தனது உலகிலே (சிவலோகத்திலே) யான் சென்று சேரும்படி. குறி இல் - மாயையின் தன்மை ஒன்றும் இல்லாத. அறு குணத்து ஆண்டு கொண்டார் - தமது அருட்குணம் ஆறனுள்ளும் படுத்து ஆண்டு கொண்டார். இறைவனது எண்குணங்களை ஆறாகக்கூறுமிடத்து, தூய உடம்பினனாதல் இயல்பாகவே பாசங்களின் நீங்குதற்கண்ணும், இயற்கையுணர்வு முற்று முணர்தற்கண்ணும் அடங்கும்; அவ்வாறு அடக்கி, அக் குணங்களை 'ஆறு' என்றலும் மரபாகலின், "அறுகுணத்து ஆண்டு கொண்டார்' என்றருளினார். இதனால், 'பாசம் நீங்கி இறைவனை அடையப்பெற்ற உயிர்அவனது குணங்களெல்லாம் தன்மாட்டு விளங்கக் கொண்டுநிற்கும்' என்பது பெறப்பட்டது. "எண் குணத்துளோம்" (ப.98 பா.10) எனப் பின்னர் வருதலுங் காண்க. இக் குணங்கள்மேலே (ப.16. பா.4, 7.) காட்டப்பட்டன. தாவி - விரைந்து. 'தாவி வரு தீர்த்தம்' என்க. முதற் காவிரி - முதற்கண்வைத்து எண்ணப்படும் காவிரி; இஃது இத்தலத்தின் அணிமைக்கண் உண்மையின் முதற்கண் எண்ணப்படுவதாயிற்று. பொற்றாமரைத் தீர்த்தம், மதுரைத் திருக்கோயிற்கண் உள்ளது. புட்கரணி - தாமரைக் குளம்; தாமரைக் குளமாய் உள்ள பிற தீர்த்தங்கள். கோவி -கிருட்டிணை நதி. குமரி - குமரி யாறு; இது தென்றிசைக்கண்கடலாற் கொள்ளப்பட்டது. அதனால், அத் தென்கடல் இஞ்ஞான்று அத்தீர்த்தமாகக் கொள்ளப்படுகின்றது. "தீர்த்தம்" என்றது, மகாமகத் திருக்குளத்தை. 'குடந்தைக் கீழ்க்கோட்டத்திற்கு அண்மையில் உள்ள இத்திருக்குளத்தில் தீர்த்தங்கள் பலவும் தெய்வவடிவில் வந்து கலந்து நிற்கும் என்பது புராணமாகலின். 'இத்தீர்த்தமெல்லாம் தாவிவரு தீர்த்தஞ் சூழ்ந்தகுடந்தைக் கீழ்க்கோட்டம்' என்று அருளினார்.

11. பொ-ரை: குடந்தைக் கீழ்க்கோட்டத்துத்திகழும் எம் கூத்தனார், இறையின்பம் எய்துதலையே முடிந்தபயனாய்த் தெளியவுணர்ந்து தியானத்தில்