கு-ரை: 'மின் காட்டும்மருங்குல், கொடி மருங்குல்' எனத் தனித்தனி இயைக்க. 'மின்னலைத் தன்னிடத்தே காட்டும்' என்பது சொற்பொருளாயினும், 'காட்டும்' என்பது உவம உருபேயாம். மருங்குல் - இடை. 'விருப்பவன்' என்பது 'கேள்வன்' என்னும் பொருளுடைத்து; அகரம், சாரியை 'பொருப்பாகிய வலிமை உடைய சிலை' என்க. பொருப்பு -மலை. சிலை - வில். 'தருமி' என்னும் அந்தணச் சிறுவனுக்கு, "கொங்கு தேர் வாழ்க்கை" (குறுந்தொகை-2) என்னும் அகப்பாட்டைப் பாடி ஈந்து, அதனை அறியாது குற்றங்கூறிய நக்கீரர் முன் புலவனாய்ச் சங்கத்திற்சென்று வாதிட்டு, பாட்டுக் குற்றம் அற்றதாதலையும், அதனைக் குற்றங் கூறியதே குற்றமாதலையும் தெளிவித்துபாண்டியன் வைத்திருந்த பொற்கிழியை அவ்வந்தணச்சிறுவன் பெறச் செய்து மறைந்தமையின், "நன்பாட்டுப்புலவனாய்ச் சங்கம் ஏறி, நற்கனகக் கிழி தருமிக்கு அருளினோன் காண்" என்று அருளிச்செய்தார். கனகம் - பொன். கிழி - முடிப்பு. இவ்வரலாற்றின் விரிவை, திருவிளையாடற் புராணத்துட் காண்க. இவ்வருட் செயலை ஈண்டு அருளிச் செய்தமையால், 'தருமி' என்பவன்' இத்தலப் பெருமானை வழிபட்டோனாகவும்கருத இடம் உண்டு. 'கொன்றை பொன்காட்ட' என்க. கடி -வாசனை. கொன்றையும் காந்தளும் பொன்னையும், கையையும் காட்டுதல் தம்தம் பூக்களின் வண்ணத் தானும், வண்ணத்தொடு வடிவத்தானும் என்க. 'கொன்றை சொரிகின்ற பொன்னை, காந்தள் கையேந்திவாங்கும்' என அணிந்துரைத்தல் கருத்து. புனம் - காடு. கொன்றையையும் காந்தளையும் இயைத்து அருளிச்செய்தமையின், "செழும்புறவு" என்றது, முல்லையும் குறிஞ்சியும்மயங்கிய நிலத்தை என்க. தென் - இசை. 'இசை பாடுவதுவண்டாக, அதற்குச் சொரியப்படும் பொன்னைக் காந்தள்பெறுகின்ற திருப்புத்தூர்' என்றது, 'பாட்டை ஆக்கினோன் சிவபிரானாக, அதற்குப் பாண்டியனால் வைக்கப்பட்ட பொற்கிழியைத் தருமி பெற் றான்' என்பதனைத் தோற்றுவிக்கும் குறிப்பு மொழியாய் நின்று, சிவபிரானது அமைதி (திருத்தி)யையும், அருள் நிலையையும் விளக்குவதாம் என்க.
|