| 2849. | உரம்மதித்த சலந்தரன்தன் ஆகங் கீண்ட | | | வோராழி படைத்தவன்காண் உலகு சூழும் | | | வரம்மதித்த கதிரவனைப் பற்கொண் டான்காண் | | | வானவர்கோன் புயம்நெரித்த வல்லா ளன்காண் | | | அரமதித்துச் செம்பொன்னி னாரம் பூணா | | | அணிந்தவன்காண் அலைகடல்சூழ் இலங்கை வேந்தன் | | | சிரம்நெரித்த சேவடிகாண் திருப்புத் தூரில் | | | திருத்தளியாண் காண்அவனென் சிந்தை யானே. | 10 |
திருச்சிற்றம்பலம்
'இந்து' எனவும் போந்தவை, வளர்பிறைச் சந்திரனைக் குறித்தன என்பது அச்சிவஞானபோத வெண்பா வுரையான் அறிக. பிறங்கு - விளங்குகின்ற. கழுக்குன்றம், தொண்டை நாட்டுத்தலம். பேரெழில் ஆர் - மிக்க அழகு பொருந்திய. சீர்- புகழ். 10. பொ-ரை: தனது வலியைப் பெரிதாகமதித்த சலந்தரனின் உடலைப் பிளந்த ஒப்பற்ற ஆழியைப் படைத்தவனும், உலகினைச் சூழவருவோனாய் எல்லாராலும் மேலாக மதிக்கப்பட்ட சூரியனுடைய பல்லைப் பறித்தவனும், இந்திரனுடைய புயத்தை நெரித்த வன்மை யுடையவனும், பாம்பினைச் செம்பொன் ஆரமாகவும் பூணாகவும் மதித்து அணிந்தவனும், அலைகடல் சூழ் இலங்கைக்கு இறையாகிய இராவணனுடைய சிரங்களை நெரியச் செய்த சேவடியினனும் ஆகி, திருப்புத்தூர்த் திருத்தளியில் திகழும் சிவபெருமான் என்றும் என் சிந்தையில் நின்று நிலவுபவன் ஆவான். கு-ரை: உரம் மதித்த - தனது வலியையே பெரிதாக மதித்த. பின்பு கீண்ட ஆழியைப் படைத்தவன் (உண்டாக்கியவன்) என்றதாம்; ஆகவே, 'ஆகம் கீளுதற்குஓர் ஆழியைப் படைத்தவன்' என்பது கருத்தாயிற்று. வரம் மதித்த - யாவராலும் மேலாக மதிக்கப் பட்ட; 'பலர் புகழ் ஞாயிறு' (தி.11 திருமுருகாற்றுப் படை -2) என்றது காண்க. 'அரவினைப் பொன்னாரமாகவும், பூணாகவும்மதித்து அணிந்தவன்' என்க. 'அரா' என்பதன் ஈற்று ஆகாரம்குறுகி நின்றது. "சேவடி" என்பது, சினையாகு பெயராய் அதனை உடையவன் மேல் நின்றது.
|