| 2854. | கான்மறையும் போதகத்தி னுரிவை கண்டேன் | | | காலிற் கழல்கண்டேன் கரியின் தோல்கொண் | | | டூன்மறையப் போர்த்த வடிவுங் கண்டேன் | | | உள்க மனம்வைத்த உணர்வுங் கண்டேன் | | | நான்மறை யானோடு நெடிய மாலும் | | | நண்ணி வரக்கண்டேன் திண்ண மாக | | | மான்மறி தங்கையின் மருவக் கண்டேன் | | | வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே. | 5 |
கூர் - மேன்மேல் மிக. "மெய்யடியார் தம்மை விரும்ப" என்றதில்நின்ற, 'தாம்' என்பது, இறைவன் மேற்றாகிய பெயர். இளைக்கும் - கருடனுக்கு அஞ்சும்; 'கருடனுக்கு அஞ்சி அடைக்கலம் புகுந்த பாம்புகளைச் சிவபிரான் அணிகலங்களாக அணிந்து கொண்டான்' என்பது புராணம். கதம் - சினம். கலம் -அணிகலம். 'என்பின் அகலம் திகழ்ந்து' எனவும் பாடம் கொள்வர். திளைத்தல்- நீற்றில் மூழ்குதல். சேண் ஆர் - வானத்தில் பொருந்திய. பொன்ற - அழிய. 'வரிசிலை' என்பது இன அடை. 5. பொ-ரை: காட்டில் மறைந்து வாழும் யானையின் தோலை உரித்தவராய், காலிற்கட்டியகழலினராய், அவ் யானைத் தோலின் புலாற் பொல்லாங்கு மறையும் வண்ணம் அதனை, போர்வையாகப் போர்த்திக் கொண்ட வடிவினராய், உயிர்கள் தம்மை நினைத்தற்கு உரிய மனத்தை உபகரித்து அருளினவராய், நான்மறையானாகிய பிரமனும் நெடியானாகிய திருமாலும் தம் வலப்பாலும் இடப்பாலும் நண்ணவருபவராய், மான் கன்று நிலையாகப் பொருந்தி நிற்கும் கையினராய்வாய்மூர்ச் சிவபெருமானை நான் கண்டேன். கு-ரை: கான் மறையும் போதகத்தின் உரிவை - காட்டில் மறைந்து வாழும் யானையின்தோல்; யானைக்குக் கொடுக்கப்பட்ட இவ்வடை இன அடை. 'அக் கரியின்தோல்கொண்டு' என எடுத்துக்கொண்டு உரைக்க. ஊன் மறைய - யானைத் தோலினதுபுலால் தன்மை நீங்கித் தனக்கு உரியதாந் தன்மை அடைய; இங்கு, 'செய்து' என ஒருசொல் வருவிக்க, உள்க. தன்னை நினைத்தற்கு; மனத்தை வைத்தது (தந்தது) உயிர்கட்கு என்க. உணர்வு என்றது, அருளை. மறையோனும் மாலும் நண்ணி வருதல், வலப்பக்கத்தும் இடப்பக்கத்தும் என்க. திண்ணமாக மருவுதல் - நிலையாகப் பொருந்துதல்.
|