| விருந்தாய்ப் பரந்த தொகுதி கண்டேன் | | | மெல்லியலும் விநாயகனுந் தோன்றக் கண்டேன் | | | மருந்தாய்ப் பிணிதீர்க்கு மாறு கண்டேன் | | | வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே. | 8 |
பெண்ணொரு பாகன் ஆதல் போன்றனவும் தம்பால் பொலியக் கொண்டவராய்,போற்றி என்று கூறி விண்ணோர்கள் புகழுமாறு விளங்குபவராய், அன்பருக்கு அருளும் தன்மையாராய், நிலனொடு நீராய் நிற்பவராய், புதியராய் வந்துபரவிய பூதவேதாளக் கணங்களிடையே திகழ்பவராய், மெல்லியல் உமையும் விநாயகனும் மனைவியும் மகனுமாம் உறவு முறை கொண்டவராய், பிணிதீர்க்கும் மருந்தாம் தன்மையினராய் வாய்மூர்ச் சிவபெருமானை நான் கண்டேன். கு-ரை: பொருந்தாத செய்கை - உலகத்தார்க்கு ஏலாத செய்கை; அவை, சாம்பல் பூசுதல்,எலும்பும் தலைமாலையும் அணிதல், தலை ஓட்டில் இரத்தல், நஞ்சை உண்ணுதல் முதலியனவாகக் கொள்க. இன்னோரன்னவை, அவன் பற்றற்றானாதலை உணர்த்தும். இனி, பொருந்தாத செய்கை, ஒன்றோடொன்று ஒவ்வாத செயல்களுமாம்; அவை, சடைதரித்துக் கல்லாடை உடுத்தும் பெண்ணொரு பாகனாதல், "ஓங்குமலைப்பெருவிற் பாம்புஞாண் கொளீஇ ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப் பெருவிறல்" அமரர்க்கு வென்றி தந்து" (புறம் - 55) பலவிடத்தும் இரந்து திரிதல் முதலியனவாம் இப்பெற்றியன, அவன் உலகத்துள் யாதொரு கூற்றினும் படாமையை உணர்த்தும், 'போற்றி' என்பதன் இகரம் தொகுத்தலாயிற்று, 'போற்றி இசைத்து' என்றது, 'போற்றி எனச் சொல்லி' என்றவாறு; இனி, 'போற்று இசைத்து' எனவே கொண்டு, 'போற்றுதலாகிய சொற்களைச் சொல்லி' என உரைத்தலுமாம். பரிந்தார் - அன்பு செய்தவர். பரிசு - தன்மை: உம்மை, சிறப்பு "பாராய்ப்புனலாகி" என்றதனால், ஏனைய பூதங்களும் கொள்ளப்படும்; அவையாகிநிற்றல், அப் பூதங்கட்குத் தலைவராக எண்ணப்படும் தேவர்கள் அவனதுகுறிப்பின்வழி நிற்குமாற்றால் காணப்பட்டது. விருந்து - புதுமை; 'புதியனவாய்ப் பரந்த தொகுதி' என்றது. வேறிடங்களிற் காணப்படாது நிறைந்துநின்று மருட்கையை விளைத்த கூட்டம்; அவை பூதவேதாளங்கள் முதலிய பதினெண்கணங்களுமாம். மெல்லியல் - உமை. "விநாயகனும்" என எண்ணின்கண் நின்ற எச்ச உம்மையானே 'முருகனும்' என்பது தழுவப்பட்டது. பிணி, உடல் நோயும், உயிர்நோயும் என்க. எனவே 'மருந்து' என்றதும் அவை யிரண்டற்கும் ஏற்றவாற்றாற் கொள்ளப்படும்.
|