பக்கம் எண் :

1120
 
2858.மெய்யன்ப ரானார்க் கருளுங் கண்டேன்

வேடுவனாய் நின்ற நிலையுங் கண்டேன்

கையம் பரணெரித்த காட்சி கண்டேன்

கங்கணமும் அங்கைக் கனலுங் கண்டேன்

ஐயம் பலவூர் திரியக் கண்டேன்

அன்றவன்றன் வேள்வி யழித்து கந்து

வையம் பரவ இருத்தல் கண்டேன்

வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே.

9

2859.கலங்க இருவர்க் கழலாய் நீண்ட

காரணமுங் கண்டேன் கருவாய் நின்று

பலங்கள் தரித்துகந்த பண்புங் கண்டேன்

பாடல் ஒலியெலாங் கூடக் கண்டேன்

இலங்கைத் தலைவன் சிரங்கள் பத்தும்

இறுத்தவனுக் கீந்த பெருமை கண்டேன்

வலங்கைத் தலத்துள் அனலுங் கண்டேன்

வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே.

10

திருச்சிற்றம்பலம்


9. பொ-ரை: மெய்யன்பர்க்கு அருளுபவராய், வேட்டுவக் கோலம் கொண்டு நின்றவராய், கையிடத்துக்கொண்ட அம்பால் அரண்களை அழித்த காட்சியினராய், பாம்புக்கங்கணராய், அங்கையில் அனல் ஏந்தியவராய், பல ஊர்களிலும் திரிந்து பிச்சை ஏற்பவராய், பகைத்த தக்கன் வேள்வியை அழித்தவராய் மகிழ்ந்து உலகம் பரவ இருந்தவராய் வாய்மூர்ச் சிவபெருமானை நான் கண்டேன்.

கு-ரை: "மெய்யன்பரானார்க்கு" என்புழி, 'செய்யும்' என ஒருசொல் வருவிக்க; அன்றி, 'அருள் - அருளுதல்' என்றலுமாம். 'கங்கணம், பாம்பினால் ஆயது' என்க. அன்று அவன் - பகைத்த அவன்; தக்கன். 'பரவ உகந்து இருத்தல்' எனக் கூட்டுக. வேடுவனாய் நின்ற நிலை முதலியன, வீரக் குறிப்பு, கபாலம் ஏந்தி நிற்றல் முதலியவற்றால் காணப்பட்டன; அன்றி, அவற்றை எல்லாம் சுவாமிகள் காணுமாறு இறைவன் அங்கே காட்டியருளினான் எனினும் இழுக்காகாது.