10. பொ-ரை: மாலும் அயனும் கலங்குமாறு நீண்ட தழற் பிழம்பாய்த் தோன்றிய காரணராய், முதலாய் நின்று பயன்களைத் தன்னுட் கொண்டு மகிழ்ந்த பண்பினராய், பாடல் இசையும் ஏனைய ஒலியும் தாம் ஆம் தன்மையராய், இலங்கைக் கிறை இராவணனுடையபத்துத் தலைகளும் நசுங்கச் செய்து பின் அவனுக்கு வரங்கள் ஈந்தபெருமையராய், வலக்கையிடத்து அனல் ஏந்தியவராய் வாய்மூர்ச் சிவபெருமானைநான் கண்டேன். கு-ரை: கலங்க - திகைக்க. இருவர், மாலும் அயனும்; அவர் திகைத்தது, அளவறியப்படாது நீண்டு நின்றமை கண்டு. காரணமாவது, அவர் தமது மயக்கம் நீங்கித் தனது முதன்மையை உணருமாறு செய்ய நினைந்தமை; அஃது அதன் பயனாய் விளைந்த விளைவைக் குறித்தது; அவ்விளைவாவது, அவ்விருவரும் அவன் அடியாராய் ஏவல்கேட்டு நின்றமையை. கரு - முதல். பலங்கள் - பயன்கள். தரித்து உகத்தல் -தாங்கியருளுதல். 'எல்லா விளைவுகட்கும் முதற்பொருளாய், அவ்விளைவுகள் அனைத்தும் முன்னே தன்னிடத்து அடங்கி நின்று பின்தோன்றுமாறு செய்யுந்தன்மை' என்றபடி. கூட - ஒத்து இயைய. இலங்கைத் தலைவனுக்கு ஈந்த பெருமையைக்கண்டது, அதுபோலும் பல நிகழ்ச்சிகளால் என்க. 'வலக்கை' என்பது மெலிந்துநின்றது; 'வலத்தின்கண் கையின்' என அடுக்காக்கி உரைத்தலுமாம். "அனல்" என்றது, மழுவை. திருநாவுக்கரசர் புராணம்
| | மாட நீடு திருப்புகலி மன்ன ரவர்க்கு மாலயனும் | | நேடி இன்னங் காணாதார் நேரே காட்சி கொடுத்தருள | | ஆடல் கண்டு பணிந்தேத்தி அரசுங் காணக் காட்டுதலும் | | பாட அடியார் என்றெடுத்துப் பரமர் தம்மைப் பாடினார். |
| | பாடுந் தமிழ்மா லைகள் கொண்டு பரமர் தாமும் எழுந்தருள | | நீடுந் திருவாய் மூரடைந்து நிலவுங் கோயில் வலஞ்செய்து | | சூடும் பிறையார் பெருந்தொண்டர் தொழுது போற்றித் துதி செய்து | | நாடுங் காதல் வளர்ந்தோங்க நயந்தந் நகரில் உடனு றைந்தார். | -தி.12 சேக்கிழார். |
|