பக்கம் எண் :

1122
 

78. திருவாலங்காடு

பதிக வரலாறு:

வாகீசர், திருவொற்றியூர் திருப்பாசூர் முதலான பதிகளை வணங்கித்திருவாலங்காடு சென்று பணிந்து பாடியருளியவற்றுள் ஒன்று இத்திருப்பதிகம். (தி.12 திருநாவு. புரா. 342)

குறிப்பு: இத் திருப்பதிகம், 'தாமே' என்னும் முடிபுடைய தொடர்களால் இறைவன் பெருமைகளை வகுத்தருளிச் செய்தது.

திருத்தாண்டகம்

ப. தொ. எண்: 291

பதிக எண்: 78

திருச்சிற்றம்பலம்

2860.ஒன்றா வுலகனைத்து மானார் தாமே

ஊழிதோ றூழி உயர்ந்தார் தாமே

நின்றாகி யெங்கும் நிமிர்ந்தார் தாமே

நீர்வளிதீ யாகாச மானார் தாமே

கொன்றாடுங் கூற்றை யுதைத்தார் தாமே

கோலப் பழனை உடையார் தாமே

சென்றாடு தீர்த்தங்க ளானார் தாமே

திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

1


1. பொ-ரை: தாமே கலந்து உலகங்கள் யாவும் ஆனவரும், ஊழிகள் தோறும் பல உயிர்களை வீடேற்றி உயர்ந்தவரும், ஒருநிலையே நின்று எல்லா இடங்கட்கும் உரியவராய்ப் பரந்தவரும், நீரும் வளியும் தீயும் ஆகாசமுமாகி நின்றவரும், கொன்று திரிகின்ற கூற்றுவனை உதைத்தவரும், அழகிய பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும், தேடிச்சென்று மூழ்கும் தீர்த்தங்கள் ஆனவரும் திருவாலங்காட்டுறையும் செல்வரே ஆவார்.

கு-ரை: "உலகு அனைத்தும்" என்பதனை, இடைநிலைத் தீவகமாக வைத்து, 'உலகம்முழுதும் தனது ஒரு வியாபகத்துள் அடங்கி நிற்கும் பொருளாகும்படி அவையனைத்துமாய் நிறைந்து நின்றார்' என உரைக்க. இனி, 'ஒன்றாய் உலகனைத்தும் ஆனார்' எனப் பாடம் ஓதி, 'முன்னர்த் தாமாகிய ஒரு பொருளாய் நின்று. பின்னர் உலகப் பொருள் பலவும் ஆயினார்,