பக்கம் எண் :

1124
 
2862.ஆவுற்ற ஐந்தும் உகந்தார் தாமே

அளவில் பெருமை யுடையார் தாமே

பூவுற்ற நாற்றமாய் நின்றார் தாமே

புனிதப் பொருளாகி நின்றார் தாமே

பாவுற்ற பாட லுகப்பார் தாமே

பழனை பதியா வுடையார் தாமே

தேவுற் றடிபரவ நின்றார் தாமே

திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

3


அன்பர் ஆனவரும், பற்பல வேடங்களைப் புனைபவரும், பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும், மலையை வில்லாகக் கொண்டு மும்மதில்களையும் அழித்தவரும் திருவாலங் காட்டுறையும் செல்வரே ஆவார்.

கு-ரை: சரண் என்று இருத்தலாவது, தமது அறிவு இச்சை செயல்கள் யாவும் அவரது அறிவு இச்சை செயல்களின் வழிப்படுவன அல்லது தனித்து நிற்கமாட்டாமையை உணர்ந்து, தம் செயலின்றி, எல்லாம் அவர் செயலாக நிற்றல். 'பலபலவேடங்களும் ஆனார்' என, உம்மையைப் பிரித்துக் கூட்டி, "ஆனார்" என்பதற்கு, 'உடையவர் ஆனார்' என உரைக்க. அட்டார் - அழித்தார்.

3. பொ-ரை: பசுவிடத்துப் பொருந்திய ஐந்து பொருள்களையும் விரும்பியவரும். அளவிறந்த பெருமையுடையவரும், மலரின்கண் மணம்போல எல்லாப் பொருள்களிலும் நுண்ணியராய் நிறைந்து நின்றவரும், பா என்னும் ஓசையாம் உறுப்புப் பொருந்திய பாட்டினை விரும்புபவரும், பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும், தேவர் பலரும் அடைந்து அடிபரவ நின்றவரும் திருவாலங்காட்டுறையும் செல்வரே ஆவார்.

கு-ரை: ஆ உற்ற ஐந்து - பசுவின்கண் பொருந்திய ஐந்து; பால், தயிர், நெய், நீர், சாணம் என்பன. உகந்தார் - ஆடுதற்கு விரும்பினார். பூவுற்ற நாற்றமாய் நின்றார் - மலரின்கண் மணம் போல எல்லாப் பொருள்களிலும் நுண்ணியராய் நிறைந்து நின்றார். புனிதப் பொருள் - இயல்பாகவே மாசின்றித் தூய்தாயபொருள். இத் தன்மையை, 'விசுத்த தேகம்' என்னும், சிவாகமம். பா உற்றபாடல் - 'பா' என்னும் உறுப்புப் பொருந்திய பாட்டு; 'பா' என்னும் உறுப்புடைமையை எடுத்தோதியது, இசையிடத்து விருப்பம் உடையர் என்பது உணர்த்துதற்கு. 'தெய்வம்' என்னும் பொருளதாகிய, 'தே' என்னும் பெயர், சொல்லால் அஃறிணையாதலின், அத்திணை இருபாற்கும் பொதுவாய், ஈண்டுப் பன்மைக்கண் வந்தது; 'தேவர் பலரும் அடைந்து அடிபரவ நின்றார்' என்பது பொருள்.