பக்கம் எண் :

1128
 
2866.மையாருங் கண்ட மிடற்றார் தாமே

மயானத்தி லாடல் மகிழ்ந்தார் தாமே

ஐயாறும் ஆரூரூம் ஆனைக் காவும்

அம்பலமுங் கோயிலாக் கொண்டார் தாமே

பையா டரவ மசைத்தார் தாமே

பழனை பதியா வுடையார் தாமே

செய்யாள் வழிபட நின்றார் தாமே

திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

7


உடையவரும், வலியதோள்கள் எட்டும் உடையவரும் திருவாலங் காட்டுறையும் அடிகளே ஆவார்.

கு-ரை: தொண்டாய் - தொண்டராய். சுவண்டர் - சுவண்ணர் (நல்ல நிறம் உடையவர்) என்பதன் மரூஉ. 'பண்டான' என்பதன் இறுதி நிலை தொகுத்தலாயிற்று; 'பண்டு ஆன(பழைமையான)' என்று ஆயினும், 'பண் தான (பண்களுக்குரிய தானங்களிலே -இடங்களிலே - பொருந்திய)' என்றாயினும் பிரித்துப் பொருள் கொள்க. இங்குக் கூத்தப்பெருமான் எட்டுத் தோள்களை உடையவராய் இருத்தல் நினைவு கூரத்தக்கது.

7. பொ-ரை: கருமைபொருந்திய மிடற்றினை உடையவரும், சுடுகாட்டில் மகிழ்ந்து ஆடினவரும், ஐயாறும், ஆரூரும், ஆனைக்காவும் தில்லையம்பலமும் கோயிலாகக் கொண்டவரும், படம் விரித்தாடும் பாம்பைக் கச்சையாகவும் கங்கணமாகவும் பிறவாகவும் கட்டியவரும், பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும், திருமகள் வழிபட அவட்குவரமளித்து நின்றவரும் திருவாலங் காட்டுறையும் செல்வரே யாவர்.

கு-ரை: மை ஆரும் - கருமை நிறம் பொருந்திய, "மையாருங் கண்டமிடறு" என்றதனை, "இடைச்சொற் கிளவி, உரிச்சொற் கிளவி" (தொல். சொல். 159.) என்பனபோலக் கொள்க. அம்பலம் - தில்லை யம்பலம். ஐயாறு முதலிய நான்கும் சோழ நாட்டுத் தலங்கள். அம்பலத்தை நினைந்தருளியது, இத்தலத்திலும் பெருமான் ஆடும் பெருமானாய் நின்றருளுதலைக் கண்டு என்க. இங்குள்ள அம்பலம் அரதன அம்பலமாகும். செய்யாள் - திருமகள்; இவள், இந்திரனால் தலையற்று வீழ்ந்த தன் கணவன் திருமாலை உயிர்ப்பித்துத் தர வேண்டிச் சிவபிரானை வழிபட்டு, அவ்வேண்டுதல் நிறைவுறப் பெற்றாள் என்பது திருவாரூர்த் தலவரலாறு.