பக்கம் எண் :

1130
 
2869.மாலைப் பிறைசென்னி வைத்தார் தாமே

வண்கயிலை மாமலையை வந்தி யாத

நீலக் கடல்சூ ழிலங்கைக் கோனை

நெரிய விரலா லடர்த்தார் தாமே

பாலொத்த மேனி நிறத்தார் தாமே

பழனை பதியா வுடையார் தாமே

சீலத்தா ரேத்துந் திறத்தார் தாமே

திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

10

திருச்சிற்றம்பலம்


கொள்ளத்தகும் ஒற்றியூரை நிலையாகப் பற்றி நின்றவரும், உலகத்தாரால் உயர்த்துப் புகழப்படுபவரும், பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும், வலியவினையாகிய தீராத நோயைத் தீர்ப்பவரும் திருவாலங்காட்டுறையும் செல்வரேயாவர்.

கு-ரை: கார் ஆர் - கருமை பொருந்திய; 'மேகங்கள் உண்கின்ற' என்றுமாம். 'ஒற்றியூர்பற்றி இருந்தார்' என்றது, 'தமக்கு உரித்தல்லாது ஒற்றியாகப் பெற்ற ஊரைநிலையாகப் பற்றியிருக்கின்றார்' என்னும் நயந்தோற்றி நின்றது. வினை, எளிதில் பிறிதொன்றால் நீங்குவதன்றாகலின், "தீராத வல்வினைநோய்" என்று அருளினார்.

10. பொ-ரை: மாலைக் காலத்துப் பிறையைச் சென்னியில் சேர்த்தவரும், வளமிக்க கயிலைமலையை வணங்காதவனும் கரிய கடலால் சூழப்பட்ட இலங்கைக்கு அரசனுமாகிய இராவணனுடைய உடல் நெரியுமாறு கால்விரலை ஊன்றி வருத்தினவரும், பால்போலும் நிறங்கொண்ட மேனியினரும், பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும், ஒழுக்கமுடைய உயர்ந்தோர் ஏத்தும் கூறுபாட்டில் அமைந்த அறக்கருணை உடையவரும் திருவாலங்காட்டுறையும் செல்வரே ஆவார்.

கு-ரை: மாலைப் பிறை - மாலைக் காலத்தில் தோன்றும் பிறை. வந்தியாத - வணங்காத. அடர்த்தார் - வருத்தினார். 'பாலொத்த நிறத்தார்' என இயையும். மேனிநிறம் - மேனியது நிறம். 'மேனி பாலொத்த நிறத்தார்' என மாற்றி உரைப்பினும் ஆம். இந்நிறம்; திரு நீற்றினால் ஆயது என்க. சீலத்தார் -ஒழுக்கமுடையவர்; அவர்கட்கே சிவபிரானது அறக் கருணை உரியது ஆகலின், அவன் அவர்கள் ஏத்தும் திறம் உடையனாயினான் என்க.