பக்கம் எண் :

1131
 

79. திருத்தலையாலங்காடு

பதிக வரலாறு:

சுவாமிகள், திருவீழிமிழலை, திருவாஞ்சியம் பொழுதுதிருமறைக்காடு செல்பொழுதில் புனிதர்வாழ் பதிகள் பல வணங்கி அருளியவற்றுள் ஒன்று இத் திருப்பதிகம். (தி.12 திருநாவு. புரா. 263)

குறிப்பு: இத் திருப்பதிகம், சிவபெருமானது பெருமைகளைத் தனித்தனி நினைந்து, அப்பெருமானை அடையாது பலநாட்களை வீணே போக்கினமைக்கு இரங்கி அருளிச்செய்தது.

திருத்தாண்டகம்

ப. தொ. எண்: 292

பதிக எண்: 79

திருச்சிற்றம்பலம்

2870.தொண்டர்க்குத் தூநெறியாய் நின்றான் தன்னைச்

சூழ்நரகில் வீழாமே காப்பான் தன்னை

அண்டத்துக் கப்பாலைக் கப்பா லானை

ஆதிரைநா ளாதரித்த அம்மான் தன்னை

முண்டத்தின் முளைத்தெழுந்த தீயா னானை

மூவுருவத் தோருருவாய் முதலாய் நின்ற

தண்டத்திற் றலையாலங் காடன் தன்னைச்

சாராதே சாலநாள் போக்கி னேனே.

1


1. பொ-ரை: தொண்டர்க்குத் தன்வழி நிற்றலே நன்னெறியாகச் செய்து நின்றவனும், சூழும்நரகில் வீழாமல் தொண்டரைக் காப்பவனும், இப்புவிக்கு அப்பாலைக்கு அப்பால் ஆனவனும், ஆதிரை நாளை விரும்பிக்கொண்ட தலைவனும், நெற்றியிடத்துத் தோன்றி வளரும் தீயினனும், அயன், அரி, அரன் என்னும் மூவுருவங்களுள் ஓருருவமாய அரனாய் நின்று அம்மூவுருவங்களுக்கும் முதலாய் நின்ற இலிங்கவுருவினனும் ஆகிய தலையாலங்காட்டு அண்ணலை அடையாமல் மிக்க நாளைவீணாள் ஆக்கினேன்.

கு-ரை: தூநெறியாய் நிற்றல் - தன்வழி நிற்றலே நன்னெறியாகச் செய்து நிற்றல். சூழ்நரகில் வீழாமே காத்தலும் தொண்டரையே யாம்.