பக்கம் எண் :

1132
 
2871.அக்கிருந்த அரையானை அம்மான் தன்னை

அவுணர்புர மொருநொடியில் எரிசெய் தானைக்

கொக்கிருந்த மகுடத்தெங் கூத்தன் தன்னைக்

குண்டலஞ்சேர் காதானைக் குழைவார் சிந்தை

புக்கிருந்து போகாத புனிதன் தன்னைப்

புண்ணியனை யெண்ணருஞ்சீர்ப் போகமெல்லாந்

தக்கிருந்த தலையாலங் காடன் தன்னைச்

சாராதே சாலநாள் போக்கி னேனே.

2


'அண்டத்துக்கு அப்பாற்பட்ட பொருள் உயிர்; அதற்கும் அப்பாற்பட்ட பொருள் சிவபிரான்' என்க. ஆதரித்த - விரும்பிய. முண்டம் - நெற்றி. நெருப்பு சிவபிரானது நெற்றிக் கண்ணில் தோன்றிற்று. ஆகலான், "முண்டத்தின் முளைத்தெழுந்த தீயானான்" என்று அருளிச்செய்தார். மூவுருவம் - அயன் அரிஅரன் உருவம்; அவற்றுள் ஓர் உருவமாய் என்றது, அரனாகி நிற்றலை. முதலாய் - அம்மூவுருவிற்கும் முதலாய்; என்றது, பரம சிவனாகி நிற்றலை. 'மூவுருவத்து ஓர்உருவாயும் முதலாயும் நின்ற தலையாலங்காடன்' என்க. தண்டத்தின் - இலிங்க உருவத்தினை உடைய.

2. பொ-ரை: சங்குமணி கட்டிய இடையினனும், தந்தை ஆனவனும், அசுரர் புரங்கள் மூன்றையும் ஒருவிநாடியில் எரித்தவனும், கொக்கிறகு செருகப்பட்ட சடைமுடிக்கூத்தனும், குண்டலஞ்சேர் காதினனும், தன்னை எண்ணி உருகுவார் மனத்துட்புக்கு அங்கிருந்து போகாத புனிதனும், புண்ணிய உருவினனும், அளவற்ற செல்வத்தான் ஆகும் இன்பமெல்லாம் வாய்த்திருந்தானும் ஆகிய தலையாலங்காட்டண்ணலை அடையாமல்மிக்க நாளை வீணாள் ஆக்கினேன்.

கு-ரை: அக்கு - சங்குமணி. "கொக்கு" என்றது, அதன் இறகை. மகுடம் - (சடை) முடி. குண்டலம் - குழை. குழைவார் - உள்ளம் உருகுபவர்.

சீர்ப் போகம் - செல்வத்தால் ஆகும் இன்பம். தக்கிருந்த- வாய்ந்து இருந்த; என்றது, 'எல்லா இன்பங்களும் இறைவனையே பற்றிநிற்பன' என்றவாறாம்; இனி, இதனைத் தலையாலங்காட்டிற்கு அடையாக்கலும் ஆம்.