பக்கம் எண் :

1137
 
2878.பண்டளவு நரம்போசைப் பயனைப் பாலைப்

படுபயனைக் கடுவெளியைக் கனலைக் காற்றைக்

கண்டளவிற் களிகூர்வார்க் கெளியான் தன்னைக்

காரணனை நாரணனைக் கமலத் தோனை

எண்டளவி லென்னெஞ்சத் துள்ளே நின்ற

எம்மானைக் கைம்மாவி னுரிவை பேணுந்

தண்டரனைத் தலையாலங் காடன் தன்னைச்

சாராதே சாலநாள் போக்கி னேனே.

9


கு-ரை: கரும்பு இருந்த - கரும்பின்கண் இருந்த; என்றது, 'சாற்று வடிவாய் இருந்த' என்றவாறு. "கன்றாப்பின் நடுதறி, காறை, என்பவற்றை மேலே (ப.61. பா.2; ப.4.பா.3.) காண்க. இரும்பு அமர்ந்த - இரும்பு பொருந்திய; இஃது உருவ நிலையை விளக்கியது. என்னான் - எனக்கு முதல்வன். ஆனைக்கா, சோழநாட்டுத் தலம். சுரும்பு - வண்டு. 'உலகுக்கெல்லாம் நலம் தரும் பொருள்' என்க.

9. பொ-ரை: பண்டுதொட்டுவரும் இசையிலக்கணத்தொடு பொருந்திய யாழிசையின் பயனாய், பாலாய், பாலின் சுவையாய், பெரியவானமாய், கனலாய், காற்றாய், தன்னைக்கண்ட அளவிலே மகிழ்ச்சி மிகுவார்க்கு எளியனாய், முதல்வனாய், திருமாலாய், நான்முகனாய், எட்டிதழ்த் தாமரை வடிவிலுள்ள இல்லமாகிய என் நெஞ்சத்துள்ளேநின்ற எம் தலைவனாய், யானைத் தோற் போர்வையைப் பேணுபவனாய், இலிங்கவடிவினனாய்த் திகழும் தலையாலங் காட்டண்ணலை அடையாமல் மிக்க நாளைவீணாள் ஆக்கினேன்.

கு-ரை: பண்டு அளவு - தொன்று தொட்டு வரும் அளவு; என்றது, இசை இலக்கணத்தை. படு பயன் -பாலின்கண் பொருந்திய பயன்; சுவை. கடு வெளி - பெரிய வானம். 'கண்ட அளவில்' என்பதில் அகரம் தொகுத்தலாயிற்று. மெய்யன்புடையார் பிறிது பயன்வேண்டாது காட்சியையே விரும்பி நிற்பராகலின், அவரே கண்ட அளவிற்களிகூர்வார் என்க. காரணன் - முதல்வன் அதிகார சத்தியால் நாரணனாகியும்கமலத்தோனாகியும் நிற்பவன் என்றதாம். எண்டளம் - எட்டுத் தளம்; தளம் -இதழ். 'எட்டிதழ்த் தாமரை வடிவில் உள்ள இல்லமாகிய என் நெஞ்சம்' என்க. 'இருதய கமலம் எட்டிதழ்த் தாமரை வடிவிற்று' என்பது, மெய்ந்நூல்களின் துணிபு. தண்டு அரன் - இலிங்க வடிவாய் உள்ள சிவபிரான்; 'துன்பத்தை நீக்குகின்ற