80. திருமாற்பேறு பதிக வரலாறு: சுவாமிகள், காஞ்சியில் கச்சித்திருமேற்றளி வணங்கித்திருமாற்பேறு சென்று தொழுது பாடியருளியது இத் திருப்பதிகம். (தி.12 திருநாவு.புரா.327.) குறிப்பு: இத் திருப்பதிகம் மேலைத் திருப்பதிகம்போல இறைவனது பெருமைகளைத் தனித்தனி நினைந்து, அவனையடையப் பெற்ற பேற்றின் அருமையை வியந்தருளிச்செய்தது. திருத்தாண்டகம் | ப. தொ. எண்: 293 | பதிக எண்: 80 |
திருச்சிற்றம்பலம் | 2880. | பாரானை பாரினது பயனா னானைப் | | | படைப்பாகிப் பல்லுயிர்க்கும் பரிவோன் தன்னை | | | ஆராத இன்னமுதை அடியார் தங்கட் | | | கனைத்துலகு மானானை அமரர் கோனைக் | | | காராருங் கண்டனைக் கயிலை வேந்தைக் | | | கருதுவார் மனத்தானைக் காலற் செற்ற | | | சீரானைச் செல்வனைத் திருமாற் பேற்றெஞ் | | | செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே. | 1 |
1. பொ-ரை: இப்பூமி ஆனவனும், பூமியின் பயன் ஆனவனும், படைத்தல் தொழிலே தானாய் அதன்கண் நின்றவனும், பல்லுயிர் மேலும் இரக்கம் கொண்டவனும், அடியார்க்குத் தெவிட்டாத இனிய அமுது ஆனவனும், எல்லா உலகுகளாகவும் விரிந்தவனும், தேவர் கோனாய்த் திகழ்பவனும், கரிய கண்டமுடையவனும், கயிலை மலைக்கு இறையவனும், நினைவார் மனத்தில் நிற்பவனும், இயமனை வெகுண்டொறுத்த புகழுடையவனும், செல்வம் மிக்கவனும் ஆகித் திருமாற்பேற்றில் திகழும் எம் செம்பவளக் குன்றினை நான் சென்று அடைந்தேன்.
|