பக்கம் எண் :

1141
 
2882.மலைமகள்தங் கோனவனை மாநீர் முத்தை

மரகதத்தை மாமணியை மல்கு செல்வக்

கலைநிலவு கையானைக் கம்பன் தன்னைக்

காண்பினிய செஞ்சுடரைக் கனகக் குன்றை

விலைபெரிய வெண்ணீற்று மேனி யானை

மெய்யடியார் வேண்டுவதே வேண்டு வானைச்

சிலைநிலவு கரத்தானைத் திருமாற் பேற்றெஞ்

செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

3


என்பதாம். "துளைக்கின்ற' என்றதும், 'அகழ்கின்ற' என்றவாறே யாம், "தூண்டரிய' என்பதில் அருமை, இன்மை குறித்து நின்றது, 'தூண்டுதல் வேண்டாதசுடர்' (விளக்கு) என்றபடி. துளக்கு இல் வான் - அசைதல் இல்லாத வானம்; எல்லாப்பொருளும் தன்னிடத்தே போக்கு வரவு புரிய, தான் போக்கு வரவு இன்றிநிற்றலின், "துளக்கில் வான்" என்றருளினார். கதிர் - ஒளி. மூவாது -மூப்படையாது. திளைக்கின்ற - விளையாடி மகிழ்கின்ற. 'மதியும் அரவும் ஒன்றி என்றும் மூவாது நின்று கங்கையொடு திளைக்கின்ற' என்க. இனி, ஒடு உருபைக் கண்ணுருபாகத் திரித்தலுமாம். அன்றி, ஒடுவை, 'எண் ஒடு' என்றலுமாம்.

3. பொ-ரை: மலைமகளுடைய தலைவனும், கடலில் படும் முத்தும், மரகதமும், சிறந்த மாணிக்கமணியும் போல்பவனும், மான் கன்றையே மிக்க செல்வமாகக் கையிடத்துக் கொண்டவனும், கச்சி ஏகம்பனும், விலைமிக்க வெண்ணீற்று மேனியனும், உண்மையடியார் கருதுவதையே தானும் கருதி முடித்தருளுபவனும், வில் நிலவும்கரத்தவனும் ஆகித் திருமாற்பேற்றில் திகழும் எம் செம்பவளக் குன்றினைநான் சென்றடைந்தேன்.

கு-ரை: மா நீர் - மிக்க நீர், இஃது, அன்மொழித் தொகையாய், கடலைக் குறித்தது. மாமணி - பெருமை பொருந்திய மணி; மாணிக்கம். கலை - மான். மல்கு - மிக்க; 'மிக்க செல்வமாகிய கலை நிலவு கையான்' என்றது, 'மான் கன்றையே மிக்ககைப்பொருளாக உடையவன்' என்றபடி, கம்பன் - கச்சி ஏகம்பன். காண்பு இனிய -காட்சிக்கு இனிய. கனகம் - பொன். "விலை பெரிய" என்றது 'சிறிதும் விலைபெறாத' என்பதனை எதிர்மறைவகையால் நகைதோன்ற அருளிச்செய்தவாறு. ஒன்றும் அறியாது உரைத்தவரை, 'நீயிர் பெரிதும் அறிதிர்' என்றல் போல. இவை இரண்டானும்,