பக்கம் எண் :

1142
 
2883.உற்றானை யுடல்தனக்கோர் உயிரா னானை

ஓங்காரத் தொருவனையங் குமையோர் பாகம்

பெற்றானைப் பிஞ்ஞகனைப் பிறவா தானைப்

பெரியனவும் அரியனவும் எல்லாம் முன்னே

கற்றானைக் கற்பனவுந் தானே யாய

கச்சியே கம்பனைக் காலன் வீழச்

செற்றானைத் திகழொளியைத் திருமாற் பேற்றெஞ்

செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

4


சிவபிரானது பற்றற்ற தன்மையை வியந்தருளியவாறு. "மெய்யடியார் வேண்டுவதே வேண்டுவான்" என்றது, 'பிறராயின், அவர் ஒன்று நினைக்கத்தான் வேறோன்று நினைத்தல் போலாது, மெய்யடியார் கருதியதையே தானும் கருதிமுடித்தருளுவன்' என்றதாம்; இஃது "என்னை ஆண்டருளினீராகில் அடியேன் பின்வந்தவனை ஈண்டுவினைப் பரசமயக் குழிநின்றும் எடுத்தாள வேண்டும்" எனத்திருவதிகையில் திலகவதியாரும்' "வண்ணங்கண்டு நானும்மை வணங்கியன்றிப்போகேன்" எனப் பழையாறை வடதளியில் சுவாமிகளும், "அடியேற்கு இன்றுஞாலம் நின் புகழேயாகவேண்டும்" என ஆலவாயில் ஆளுடைய பிள்ளையாரும் வேண்டியவற்றையே தானும் வேண்டி முடித்தமை முதலியவற்றால் இனிது விளங்கிக்கிடந்தமை காண்க. சிலை - மேருமலையாகிய வில்.

4. பொ-ரை: உறவானவனும், உடலிடத்து உயிர் ஆனவனும், ஓங்காரத்தில் முழுப்பொருள் தான் ஒருவனே ஆனவனும், உமை ஒரு பாகத்தைப் பெற்றவனும், தலைக்கோலச் சிறப்பினனும், பிறவாதவனும், பெரியனவும் அரியனவும் ஆகிய எல்லாப் பொருள்களையும் பிறர் எல்லார்க்கும் முன்னே கற்றவனும், கற்றவனாகிய தானேகற்கப்படும் பொருளுமாய் ஆனவனும், கச்சி ஏகம்பனும், இயமன் இறந்துபடச் சினந்தவனும், தானே விளங்கும் ஒளியினனும் ஆகித் திருமாற்பேற்றில்திகழும் எம் செம்பவளக் குன்றினை நான் சென்று அடைந்தேன்.

கு-ரை: உற்றான் - உறவானவன். உடல் தனக்கு - உடம்பு நிலைபெறுதற் பொருட்டு; உயிராகி அதன்கண் நிற்பவன் என்க. ஓங்காரத்து ஒருவன் - ஓங்காரத்தின் முழுப்பொருள்தான் ஒருவனே ஆகியவன்.