பக்கம் எண் :

1143
 
2884.நீறாகி நீறுமிழும் நெருப்பு மாகி

நினைவாகி நினைவினிய மலையான் மங்கை

கூறாகிக் கூற்றாகிக் கோளு மாகிக்

குணமாகிக் குறையாத உவகைக் கண்ணீர்

ஆறாத ஆனந்தத் தடியார் செய்த

அனாசாரம் பொறுத்தருளி அவர்மே லென்றுஞ்

சீறாத பெருமானைத் திருமாற் பேற்றெஞ்

செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

5


'உமையது ஒரு பாகத்தைப் பெற்றான்' என்க. எல்லாம் - எல்லாப்பொருள்களையும். "முன்னே கற்றான்" என்றது. 'யாவர்க்கும் முன்னே தான் உணர்ந்தான்' என்றவாறு. 'கற்பனவும் தானே ஆயினான்' என்றது, 'கற்றவனாகியதானே கற்கப்படும் பொருளுமாய் உள்ளான்' என்றதாம். திகழ் ஒளி - தானேவிளங்கும் ஒளி.

5. பொ-ரை: சாம்பலாயும், சாம்பலை உமிழும் நெருப்பாயும், நினைவாயும், நினைவில் நின்று இனிக்கும் உமையம்மை நிலவு கூறாயும், இயமனாயும், தீயனவும் நல்லனவுமாய்நிற்கும் அவ்வினைகளாயும், நிறைந்த அன்புக் கண்ணீரினராய் நீங்காத ஆனந்தத்தையுடைய அடியார்கள் செய்த அனாசாரமாகிய சிறு குற்றங்களைப் பொறுத்து அவர்களை என்றுஞ் சினவாத பெருமானாயும் ஆகித் திருமாற் பேற்றில் திகழும் எம் செம்பவளக் குன்றினை நான் சென்றடைந்தேன்.

கு-ரை: நீறு - சாம்பல்; இஃது உலகம் ஒடுங்கிய நிலையையும், "நீற்றை உமிழும்நெருப்பு" என்றது, உலகத்தை ஒடுக்குவதாகிய அவனது சத்தியையும், "நினைவு" என்றது உலகத்தை மீளப் படைக்கும் அவனது சங்கற்பத்தையும், "கூறாகி" என்றது, அச்சங்கற்பத்தின் வழியே படைக்கும் நிலையையும், "கூற்றாகி (கூற்றுவனாகி)" என்றது, வினைகளை ஊட்டுவித்தலையும், "கோளுமாகிக் குணமாகி" என்றது, தீயனவும் நல்லனவுமாய் நிற்கும் அவ்வினைகளுந் தானே யாய் நிற்றலையும், குறிக்கும் என்க. "உவகை" என்றது, அன்பினை. ஆறாத - நீங்காத, ஆனந்தத்து (அவ்வன்பினால் வரும்) இன்பமேலீட்டினால், 'ஆசாரம்' என்னும் வடசொல், தமிழில் பெரும் பான்மையும் புறத்தூய்மையையே குறித்து வழங்கும் என்பது, "அச்சமே கீழ்கள தாசாரம்"(குறள் - 1075.) என்பதனால் அறியப்படும்;