| 2885. | மருவினிய மறைப்பொருளை மறைக்காட் டானை | | | மறப்பிலியை மதியேந்து சடையான் தன்னை | | | உருநிலவு மொண்சுடரை உம்ப ரானை | | | உரைப்பினிய தவத்தானை உலகின் வித்தைக் | | | கருநிலவு கண்டனைக் காளத்தியைக் | | | கருதுவார் மனத்தானைக் கல்வி தன்னைச் | | | செருநிலவு படையானைத் திருமாற் பேற்றெஞ் | | | செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே. | 6 |
அதனால், இங்கு "அனாசாரம்" என்றது, அறியாமையாலும் மாட்டாமையாலும், செயல் இழப்பினாலும் மனத்தொடு படாது செய்யும் சிறு குற்றங்களையே யாம் என்பது விளங்கும். 6. பொ-ரை: மருவுதற்கினிய மறைப்பொருள் ஆனவனும், மறைக்காட்டில் உறைபவனும், மறப்பில்லாதவனும், பிறை சூடிய சடையினனும், நிலவுகின்ற தன் நிறத்தால் ஒளிரும் சுடர் ஆனவனும், மேலிடத்து உள்ளவனும், பேசுதற்கினியவனும், தவக்கோலம் தாங்கியவனும், உலகிற்கு வித்தானவனும், கறுத்த கண்டத்தவனும், காளத்தி நகரினனும், நினைப்பவர் உள்ளத்தில் நிற்பவனும், போர்த்தொழில் பயின்ற படைக்கலங்களை ஏந்தியவனும் ஆகித் திருமாற் பேற்றில்திகழும் எம் செம்பவளக் குன்றினை நான் சென்றடைந்தேன். கு-ரை: மருவு இனிய - பொருந்துதற்கு இனிய. 'இனிய பொருள்; மறைப்பொருள்' என்க. மறப்பு- மலத்தால் உளதாவ தாதலின், மலம் இலனாகிய இறைவனுக்கு மறப்பு இலதாயிற்று; அதனால் - அவன் எல்லாவற்றையும் அறிந்தாங்கு அறிந்து நிற்பன் என்க. உரு -நிறம். உம்பரான் - மேலிடத்து உள்ளவன். உரைப்பு இனிய தவத்தான் - 'பேசுதற்குஇனியவன்; தவக்கோலத்தை உடையவன்' என்க. "வித்து" என்றது. 'காரணம்' என்னும் பொருளது. 'உலகில் வித்தை' என்பது பாடம் அன்று. 'கருமை' என்பது கருஎனக் குறைந்து நின்றது. மனறக்காடு, சோழநாட்டுத் தலம். காளத்தி, தொண்டைநாட்டுத் தலம். காளத்தியில் உள்ளவனை, "காளத்தி" என ஆகுபெயரால் குறித்தருளினார் என்க. கல்வி - உறுதிப் பொருளைக் கூறும் நூல்கள்; அவற்றின் பொருளாய் நிற்றல் பற்றி, "கல்வி" என்றருளினார். படை - படைக்கலம்; மழு, சூலம் முதலியன.
|