பக்கம் எண் :

1145
 
2886.பிறப்பானைப் பிறவாத பெருமை யானைப்

பெரியானை அரியானைப் பெண்ஆண் ஆய

நிறத்தானை நின்மலனை நினையா தாரை

நினையானை நினைவோரை நினைவோன் தன்னை

அறத்தானை அறவோனை ஐயன் தன்னை

அண்ணல்தனை நண்ணரிய அமர ரேத்துந்

திறத்தானைத் திகழொளியைத் திருமாற் பேற்றெஞ்

செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

7


7. பொ-ரை: பலவகைப் பிறப்புகளாய் உள்ளவனும், வினை வயத்தால் பிறவாத பெருமையுடையவனும், தோற்றம் ஆற்றல் முதலியவற்றில் மிகப் பெரியவனும், உணர்தற்கு அரியவனும், பெண்ணும் ஆணுமாகிய வடிவினனும், குற்றமற்றவனும், தன்னை நினையாதாரைத் தான் நினையாதவனும், தன்னை நினைப்போரைத் தான்நினைப்பவனும், அறமேயாய் நின்று அதனை நிலை பெறுவிப்பவனும், நன்மை தீமைகளை அடைவிக்கும் அறவோனும், வியக்கத் தக்கவனும், தலைவனும், தேவர்கள் வணங்கும் தன்மையனும், திகழ்சோதியும் ஆகித் திருமாற்பேற்றில் திகழும் எம்செம்பவளக் குன்றினை நான் சென்றடைந்தேன்.

கு-ரை: "பிறப்பான்" என்பது, "பிறப்பு" என்னும் பெயரடியாகப் பிறந்தபெயர். 'பலவகைப் பிறப்புக்களாயும் உள்ளவன்' என்பது பொருள்.

"நிறம்"' என்றது, வடிவத்தை, பெண் ஆண் ஆய வடிவம் -மாதிருக்கும் பாதியனாய வடிவம். "நினைவான், நினையான்" என்பன, 'தன்தமராக நினைவான், நினையான்' என்பதாம். அறத்தான் - அறமேயாய் நின்று அதனை நிலைபெறுவிப்பவன். அறவோன் - அறத்தினை உடையவனாய் நல்லதற்கு நலனும், தீயதற்குத் தீமையும் அளிப்பவன். ஐயன் - வியக்கத்தக்கவன். அண்ணல் -தலைவன்.