பக்கம் எண் :

1150
 
2891.வண்டாடு பூங்குழலாள் பாகன் கண்டாய்

மறைக்காட் டுறையு மணாளன் கண்டாய்

பண்டாடு பழவினைநோய் தீர்ப்பான் கண்டாய்

பரலோக நெறிகாட்டும் பரமன் கண்டாய்

செண்டாடி அவுணர்புரஞ் செற்றான் கண்டாய்

திருவாரூர்த் திருமூலட் டானன் கண்டாய்

கொண்டாடும் அடியவர்தம் மனத்தான் கண்டாய்

கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே.

2


மாறிக் கூட்டுதலும் ஆம். கட்டிளமை வடிவமும் சிவபிரானுக்கு உண்மையின், "இளங்காளை" என்று அருளினார். "கல்" என்றது, பக்க மலைகளை; எனவே, "கல் மதில்" என்றது, உருவகமாயிற்று. கந்த மாதனம், கயிலை போல்வதொருமலை; இது, வைப்புத் தலங்களுள் ஒன்று. மண்டலம் சேர் மயக்கு - பலவகைப் புவனங்களிலும் சென்று சேர்தற்கு (பிறத்தற்கு)க் காரணமாகிய மயக்கம், விண்தலம் - தேவர் உலகம். 'அதிற் சேரும் விளக்கொளி' என்றது, தேவர்கட்குப் பெருமையைத் தருதல் கருதி. மீயச்சூர், சோழநாட்டுத் தலம். கொண்டல் அம் - மேகத்தினது அழகு. அமர்ந்து - விரும்பி. குழகன் - அழகுடையவன்.

2. பொ-ரை: திருக்கோடிகாவில் விரும்பியுறையும் அழகனே வண்டுகள் மொய்க்கும்பூக்களணிந்த குழலையுடைய உமாதேவியின் பாகனாய், திருமறைக் காட்டில் வாழும் அழகினனாய், பண்டு செய்த வினையான் வரும் துன்பத்தைத் தீர்ப்பவனாய், வீட்டுலக வழியை யுணர்த்தும் பரமனாய், செண்டு கொண்டு ஆடும் ஆட்டம் போலஎவ்வகை வருத்தமுமின்றிப் பகைவர் புரங்களை அழித்தவனாய், திருவாரூர் மூலட்டானத்தினனாய் விளங்குவான் ஆவான்.

கு-ரை: மணாளன் - அழகன். பண்டு ஆடு - முற்பிறப்பில் செய்த, 'பழவினை' என்றது, பெயரளவாய் நின்றது; "பண்டு செய்த பழவினையின் பயன்" (தி.5. ப.47. பா.1.) என்று திருக்குறுந்தொகையிலும் அருளிச் செய்தார். பரலோகம் - எல்லா உலகங்களினும் மேலாய உலகம்; வீட்டுலகம்; அஃது இறைவனது திருவருள்; "வானோர்க்கு உயர்ந்த உலகம்" (குறள் - 346.) என்றதும் அது. உலகமும்வெளியும் அல்லாத அதனை ஓர் உலகமும் வெளியும் போல அடை கொடுத்து வழங்குதல், மன மொழிகளுக்கு உட்படாத அதனை, ஒருவாறு அவற்றுக்கு உட்பட்ட பொருள்களோடு சார்த்தி உவமை வகையான் உணர்தற் பொருட்டு என்க. இந் நுட்பம்