பக்கம் எண் :

1156
 

82. திருச்சாய்க்காடு

பதிக வரலாறு:

ஆண்டவரசு, ஆளுடையபிள்ளையாருடன் திருக்கோலக்கா வணங்கிஆளுடையபிள்ளையாரிடம் விடைபெற்று, திருநனிபள்ளி முதலான பதிகளை வணங்கிப் பாடியருளியவற்றுள் ஒன்று இத்திருப்பதிகம். (தி.12 திருநாவு. புரா.189.)

குறிப்பு: இத்திருப்பதிகம், 'போலும்' என்னும் முடிபுடைய தொடர்களால், இறைவன் பெருமைகளை வகுத்தருளிச் செய்தது.

திருத்தாண்டகம்

ப. தொ. எண்: 295

பதிக எண்: 82

திருச்சிற்றம்பலம்

2898.வானத் திளமதியும் பாம்புந் தம்மில்

வளர்சடைமேல் ஆதரிப்ப வைத்தார் போலும்

தேனைத் திளைத்துண்டு வண்டு பாடுந்

தில்லை நடமாடுந் தேவர் போலும்

ஞானத்தின் ஒண்சுடராய் நின்றார் போலும்

நன்மையுந் தீமையு மானார் போலும்

தேனொத் தடியார்க் கினியார் போலும்

திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

1


1. பொ-ரை:திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே வானத்து விளங்கிய இளமதியும்பாம்பும் தம்முள் நிலவும் பகை நீங்கி வாழ அவற்றை நீள் சடைமேல் வைத்தவரும், வண்டு தேனை உண்டு மகிழ்ந்து பாடும் தில்லையில் நடனமாடும் தேவரும், ஞானமாகிய ஒளிப்பிழம்பாய் நின்றவரும், நன்மையும் தீமையும் ஆனவரும், அடியார்க்குத் தேன் போன்று தித்திப்பவரும் ஆவார்.

கு-ரை: தம்மில் - தமக்குள். ஆதரிப்ப - விருப்பங்கொள்ள; 'பகை நீங்கி வாழ'என்றவாறு. 'தம்மில் ஆதரிப்ப வளர்சடை மேல் வைத்தார்' எனக் கூட்டுக;'தன்னில்' என்பது பாடம் அன்று.