| 2899. | விண்ணோர் பரவநஞ் சுண்டார் போலும் | | | வியன்துருத்தி வேள்விக் குடியார் போலும் | | | அண்ணா மலையுறையும் அண்ணல் போலும் | | | அதியரைய மங்கை யமர்ந்தார் போலும் | | | பண்ணார் களிவண்டு பாடி யாடும் | | | பராய்த்துறையுள் மேய பரமர் போலும் | | | திண்ணார் புகார்முத் தலைக்குந் தெண்ணீர்த் | | | திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே. | 2 |
'தேனை உண்டு திளைத்து' என மாறுக. திளைத்து - இன்புற்று. "ஞானத்தின்" என்பதில் இன், அல்வழிக்கண் வந்த சாரியை; 'ஞானமாகிய ஒண்சுடர்' என்பதுபொருள்; இஃது உருவகம். "நன்மையும் தீமையும் ஆனார்" என்றது, 'எல்லாம் அவரே:அவர்க்கு வேறாய் ஒன்று இல்லை' என்றபடி. 'அடியார்க்குத் தேன் ஒத்து இனியார்'என்க. 2. பொ-ரை:மணல்செறிந்த புகாரின்கண் முத்துக்களை எறி கின்ற தெளிந்த நீரையுடைய திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே, விண்ணோர்கள் தொழுதுவேண்ட நஞ்சுண்டவரும், பரந்த துருத்தியிடத்தும் வேள்விக்குடியிடத்தும் உறைபவரும், அண்ணா மலையில் உறையும் அண்ணலவரும், அதியரைய மங்கையில் அமர்ந்தவரும், மிக்குப் பொருந்திய மதுக்களிப்பையுடைய வண்டுகள் பண்ணினைப் பாடிப்பறந்துலவும் பராய்த்துறையிடத்து மேவிய பரமரும் ஆவார். கு-ரை: பரவ - 'எம் பெருமானே' என ஏத்தி, 'எம்மைக் காவாய்' என வேண்டி நிற்க.துருத்தி, வேள்விக்குடி, பராய்த் துறை இவை சோழநாட்டுத் தலங்கள்.அண்ணாமலை, நடுநாட்டுத் தலம். அதியரைய மங்கை, வைப்புத்தலம். பண் ஆர் -பண்ணை இசைக்கின்ற. களி வண்டு - மதுக்களிப்பையுடைய வண்டுகள். ஆடுதல் -பறந்து உலாவுதல். 'அப்பண்ணினைப் பாடி ஆடும்' என்க. புகார் -காவிரியாற்றின் சங்க முகம்; இதனை, "திண் ஆர் புகார்" என்றது, மணற்செறிவு நோக்கி. அலைக்கும் -எறிகின்ற 'புகாரின்கண் முத்துக்களை அலைக்கின்ற தெள்ளிய நீரையுடைய திருச்சாய்க்காடு' என்க.
|