பக்கம் எண் :

1158
 
2900.கானிரிய வேழ முரித்தார் போலும்

காவிரிப்பூம் பட்டினத் துள்ளார் போலும்

வானிரிய வருபுரமூன் றெரித்தார் போலும்

வடகயிலை மலையதுதம் மிருக்கை போலும்

ஊனிரியத் தலைகலனா வுடையார் போலும்

உயர்தோணி புரத்துறையும ஒருவர் போலும்

தேனிரிய மீன்பாயுந் தெண்ணீர்ப் பொய்கைத்

திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

3

2901.ஊனுற்ற வெண்டலைசேர் கையர் போலும்

ஊழி பலகண் டிருந்தார் போலும்

மானுற்ற கரதலமொன் றுடையார் போலும்

மறைக்காட்டுக் கோடி மகிழ்ந்தார் போலும்


3. பொ-ரை:மலர்களிடத்துத் தேன் ஒழுகும் வண்ணம் மீன்கள் அவற்றைத் தாக்குகின்ற தெளிந்த நீர்ப் பொய்கைகள் மிக்க திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே காட்டினின்றும் மற்ற விலங்குகள் நீங்கிப்போமாறுவரும் களிற்றியானையை உரித்தவரும், காவிரிப்பூம்பட்டினத்து உள்ளவரும், தேவர்கள் கெட்டோடும் வண்ணம் வானத்தில் பறந்து வரும் திரிபுரங்களையும் எரித்தவரும், வடகயிலையைத் தம் இருக்கையாகக் கொண்டவரும், தசை நீங்கிய அத்தலையை உண்கலமாக உடையவரும், பிரளய காலத்து ஊழி வெள்ளத்து மேலே உயர்ந்து விளங்கும் தோணிபுரத்து உறையும் ஒப்பற்றவரும் ஆவார்.

கு-ரை: கான் இரிய - காட்டினின்றும் நீங்கிப் போம்படி. வேழம் - யானை. "காவிரிப்பூம்பட்டினம்" என்றது, பல்லவனீச் சரத்தை; இது திருச்சாய்க்காட்டிற்கு அண்மையில் உள்ளதே. வான் - தேவர்; இடவாகுபெயர்; 'அவர்கள் அஞ்சி நீங்குமாறு வானத்திற் செல்லுகின்ற புரம்' என்றவாறு. "வருபுரம்" என்றது, இடவழுவமைதி. ஊன் இரி அத்தலை கலனாஉடையார் - தசை நீங்கிய அத்தலையை உண்கலமாக உடையவர். தோணிபுரம் -சீகாழி. தேன் இனிய - தேன் ஒழுகும்படி. பாயும் - மலர்களில் தாக்குகின்ற.

4. பொ-ரை:தேன் நிறைந்த சோலைகளின் நடுவில் விளங்கித் தோன்றும் திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே, தசை பொருந்தி