| 2903. | மாவாய் பிளந்துகந்த மாலுஞ் செய்ய | | | மலரவனுந் தாமேயாய் நின்றார் போலும் | | | மூவாத மேனி முதல்வர் போலும் | | | முதுகுன்ற மூதூ ருடையார் போலும் | | | கோவாய முனிதன்மேல் வந்த கூற்றைக் | | | குரைகழலா லன்று குமைத்தார் போலும் | | | தேவாதி தேவர்க் கரியார் போலும் | | | திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே. | 6 |
சீசைலம்; இது தெலுங்கு நாட்டில் உள்ளது. "பல்லூழி" என்றது, 'எக்காலத்தும்' என்றவாறு, 'ஊரின்கண்' என உருபு விரித்து, 'உழன்றார்' என்றதனோடு முடிக்க. ஓத்தூர், தொண்டை நாட்டுத் தலம். சீர் - தாள அறுதி. 6. பொ-ரை: திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே, கேசி என்னும் குதிரையின் வாயைக் கிழித்து மகிழ்ந்த திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கின்ற நான்முகனும் ஆகிய இருவரும் தாமேயாய் நின்றவரும், என்றும் மாறுபடாமல் ஒருபடித்தாய்த் திகழும் மேனியுடைய முதல்வரும், முதுகுன்றமாகிய மூதூரினரும், முனிவர் தலைவனாகிய மார்க்கண்டேயன் மேல் வந்த கூற்றுவனை ஒலிக்கும் கழல் அணிந்த பாதத்தால் அன்று உதைத்தழித்தவரும் தேவர்க்குத் தலைவர் ஆகியபிரம விட்டுணு இந்திரர்க்கு அரியவரும் ஆவார். கு-ரை: மாவாய் பிளந்து - 'கேசி' என்னும் அசுரன் கொண்ட வஞ்சனை உருவமாகிய குதிரையின் வாயைக் கிழித்து; இது திருமால் செய்தது, கிருட்டினனாய் இருந்தபொழுது. உகந்த - மகிழ்ந்த. மூவாத மேனி - என்றும் ஒரு படித்தாய் இருக்கும் வடிவம். முதுகுன்றம், நடு நாட்டுத்தலம்; இஃது இக்காலத்து, 'விருத்தாசலம்' என வழங்கும். 'முதுகுன்றமாகிய மூதூர்' என்க. கோவாய முனி -முனிவருள் தலைவராயவர்; மார்க்கண்டேயர். தன், சாரியை.
|