பக்கம் எண் :

1167
 
குடமுழவச் சரிவழியே அனல்கை யேந்திக்

கூத்தாட வல்ல குழக னாகிப்

படவரவொன் றதுவாட்டிப் பாசூர் மேய

பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

3

2911.நீராருஞ் செஞ்சடைமேல் அரவங் கொன்றை

நிறைமதிய முடன்சூடி நீதி யாலே

சீராரும் மறையோதி யுலக முய்யச்

செழுங்கடலைக் கடைந்தகடல் நஞ்ச முண்ட

காராருங் கண்டனைக் கச்சி மேய

கண்ணுதலைக் கடலொற்றி கருதி னானைப்

பாரோரும் விண்ணோரும் பரசும் பாசூர்ப்

பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

4


குளிர் விசும்பின் உச்சி ஆகவும், கடல்வட்டம் சூழ்ந்ததொரு ஞாலம் ஆகவும், காண்பதற்குத் துணை நிற்கும் கதிரவன் ஆகவும், வீடடைதற்குரிய வழியாகவும், குடமுழவு சச்சரி இவற்றின் முழக்கிற்கு ஏற்ப அனலைக் கையில் ஏந்திக் கூத்தாடவல்ல அழகன் ஆகவும், படமெடுத்தாடும் பாம்பொன்றினை ஆட்டுவான் ஆகவும் அடியேன் கண்டு உய்ந்தவாறு நன்று.

கு-ரை: தடவரை - பெரிய மலை. "தட வரை ஏழ்" ஏழு தீவிலும் உள்ளன என்க. கடல்வலயம் - கடலாகிய வட்டம். காண்கின்ற - (பொருள்களைக்) காண்பதற்குத் துணையாக நிற்கின்ற. சரி - 'சச்சரி' என்னும் வாச்சியம். 'குடமுழவும்சச்சரியுமாகிய வாச்சியங்களின் வழியே கூத்தாட வல்ல' என்க. 'குடமுழவச்சதிவழியே' என்பதும் பாடம்.

4. பொ-ரை: பாரிடத்து மக்களும் விண்ணிடத்துத் தேவரும் புகழும் பாசூரிற் பொருந்திய பரஞ்சுடரை கங்கை பொருந்திய செஞ்சடை மேல் பாம்பு, கொன்றை, அழகுநிறைந்த பிறைமதி. ஆகியவற்றைச் சூடியவன் ஆகவும், சிறப்புமிக்க மறைகளை, அறத்தின் வழி உலகம் ஒழுக ஓதியருளியவன் ஆகவும், வளவிய கடலைக் கடைந்த பொழுது எழுந்த கடல் அளவு கொடுமை மிக்க நஞ்சினை உண்டதனால் கருமை பொருந்திய கண்டனாகவும், கச்சி நகரில் விளங்கும் கண்ணுதலாகவும், கடலை அடுத்துள்ள ஒற்றியூரை உயர்வாக மதிப்பவனாகவும் அடியேன் கண்டு உய்ந்தவாறு நன்று.