பக்கம் எண் :

1168
 
2912.வேடனாய் விசயன்தன் வியப்பைக் காண்பான்

விற்பிடித்துக் கொம்புடைய ஏனத் தின்பின்

கூடினார் உமையவளுங் கோலங் கொள்ளக்

கொலைப்பகழி உடன் கோத்துக் கோரப்பூசல்

ஆடினார் பெருங்கூத்துக் காளி காண

அருமறையோ டாறங்கம் ஆய்ந்து கொண்டு

பாடினார் நால்வேதம் பாசூர் மேய

பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

5


கு-ரை: நிறை மதியம் - நிறைதற்கு உரிய சந்திரன்; 'பிறை' என்றவாறு. இனி, 'அழகுநிறைந்த மதியம்' என்றலுமாம். உடன் சூடி - ஒருங்கு அணிந்து. நீதியால் -அறத்தின் வழி. ஓதி - செய்து; 'உலகம் உய்ய ஓதி' என்க. 'அறத்தைத் தான் இயல்பாகவே உணர்ந்தமையின், அதனை உலகம் உணர்ந்து உய்தற்பொருட்டு வேதத்தைச் செய்தருளினான்' என்க. நஞ்சைத் தான் உண்டதனைத் தன் கண்டம் உண்டதாகப் பான்மை வழக்கினால் அருளினார். ஒற்றி - ஒற்றியூர். பரசும் -துதிக்கின்ற.

5. பொ-ரை: பாசூரிற் பொருந்திய பரஞ்சுடரை தமது திருவிளையாடலின் நிலையை உணர்ந்து வியக்கும் விசயனது மருட்கையைக் காண வேண்டி உமையவளும் வேட்டுவக்கோலம் கொள்ளத்தாமும் ஒரு வேடனாய் வில்லை ஏந்திக் கொலையிற் பழகிய பகழியையும் வில்லிற்கோத்துக் கொம்பினையுடைய பன்றியைத் தொடர்ந்து சென்று கொடிய பூசலைச் செய்தவர் ஆகவும், காளி காணப் பெருங்கூத்தினை ஆடினார் ஆகவும், அரிய மறைவாகிய பொருளையுடைய வேதங்களையும் ஆறங்கப் பொருளையும் ஆராய்ந்து மனத்திற்கொண்டு நான்கு வேதங்களையும் பாடினவர் ஆகவும் அடியேன் கண்டு உய்ந்தவாறு நன்று.

கு-ரை: விசயன் - அருச்சுனன். வியப்பு - தமது திருவிளையாடலின் நிலையை உணர்ந்து வியக்கும் வியப்பு; இதனைக் காண விரும்பியது, அவனுக்கு (அருச்சுனனுக்கு) வரும்தீங்கினை யறிந்து அவனைக் காக்க விரைந்த தமது முற்றறிவு பேரருளோடு பேராற்றலையும், அத்தீங்கினை அறியாத தனது சிற்றறிவோடு சிறிதாயஆற்றலையும் அவன் உணர்ந்து, மேலும் மெய்யன்பு செய்து உய்தற் பொருட்டு. ஏனம்- பன்றி; அதனது கொடுமையை உணர்த்துவார் "கொம்புடைய ஏனம் "என்றருளினார்; 'நிராயுதத்தது அன்று' என்பது நயம். கோலம் - வேட்டுவக்கோலமே.