பக்கம் எண் :

1169
 

'உமையும் வேட்டுவக் கோலங்கொண்டு உடன் சென்றாள்' என்பது வியாச பாரதத்தினுங் கூறப்பட்டது; மற்றும் பெண்டிர் பலரும் சென்றனர் என்பதும் அதனுட் கூறப்படுவது.

இதனைத் தமிழில் வில்லிபுத்தூரார் தெரிவித்தது ஓர் நயம்மிக்க பாட்டு; அஃது,

"ஒரேனம் தனைத்தேட ஒளித்தருளும் இருபாதத்

தொருவன் அந்தப்

போர்ஏனந் தனைத்தேடிக் கணங்களுடன் புறப்பட்டான்

புனங்க ளெல்லாம்

சீர்ஏனல் விளைகிரிக்குத் தேவதையாங் குழவியையும்

செங்கை ஏந்திப்

பார்ஏனை உலகனைத்தும் பணிவுடனே புகழ்ந்திடத்தன்

பதிபின் வந்தாள்."

என்பது. வந்தவள் "வரையரசன் திருமடந்தை" என, அவள் வேட்டு விச்சிக்கோலங் கொண்டமையையும் மற்றும் எண்ணிறந்த மாதர் அவளைச் சூழ்ந்து நின்றமையையும் அணிந்துரைக்கும் முன்னைப் பாட்டினுள் இனிது விளங்கக்கூறினார். அம்மையோடு எண்ணிறந்த பெண்டிரும் சென்றனர் என்பது வியாசபாரதத்துட் கூறப்படுவது. இவ்வாறு முதனூலை வழிநூல் இலக்கணம் பிழையாது மொழி பெயர்த்து அதர்ப்பட யாத்த செய்யுள்களில், நயம் கருதித் தொன்மை வரலாறு ஒன்றனை ஆண்டுத் தந்துரைப்பாராய், "ஓர் ஏனந் தனைத் தேட ஒளித்தருளும் இருபாதத்தொருவன்" எனக் கூறிய அவ்வொன்றனையும் கேட்கப் பொறாத சிலர், மேற்காட்டிய செய்யுளையே தம் பதிப்பில் மறைத்துப் பதிப்பித்தனர்; முன்னைப் பெருநூல்களில் இவ்வாறு சிலவற்றை மறைத்தலும், புகுத்தலும், திரித்தலும் செய்தல் அவர்க்கு இயல்பு என்க.

'விசயன்றன் வியப்பைக் காண்பான், உமையவளுங் கோலங்கொள்ள, வேடனாய், விற்பிடித்து, கொலைப்பகழி உடன் கோத்து, ஏனத்தின்பின் கோரப் பூசல் கூடினார்' எனக் கொண்டு கூட்டுக. 'காளி காணப்பெருங்கூத்து ஆடினார்' என்க. அருமறை - அரிய மறைவாகிய பொருள்; "அங்கம்" என்றதும் அவை கருதிய பொருளை என்க. "கொண்டு" என்றது, 'பின்னர்' என்பதனை உணர்த்துங் குறிப்பினதாய் நின்றது. 'கூடினாரும் ஆடினாரும்பாடினாருமாகிய பரஞ்சுடரை' என்க. "பரஞ்சுடர்" என்றது, பன்மை யொருமைமயக்கம்.