பக்கம் எண் :

1170
 
2913.புத்தியினாற் சிலந்தியுந்தன் வாயின் நூலால்

புதுப்பந்தர் அதுஇழைத்துச் சருகால் மேய்ந்த

சித்தியினால் அரசாண்டு சிறப்புச் செய்யச்

சிவகணத்துப் புகப்பெய்தார் திறலால் மிக்க

வித்தகத்தால் வெள்ளானை விள்ளா அன்பு

விரவியவா கண்டதற்கு வீடு காட்டிப்

பத்தர்களுக் கின்னமுதாம் பாசூர் மேய

பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

6


6. பொ-ரை: பாசூரிற் பொருந்திய பரஞ்சுடரைப் பெற்ற ஞானத்தினால் உயர் சிலந்தி தன்வாயிலிருந்து வரும் நூலால் மக்களால் செய்யலாகாத பந்தலை இயற்றி அதனைச்சருகால் மூடிய திருத்தொண்டைச் சிந்தித்துச் செய்தமையால் பின் அரசனாகி நிலவுலகை ஆண்டு அப்பிறப்பிலும் சிறந்த தொண்டு செய்யச் சிவகணங்களுள் புக்கு இன்புறுமாறு சேர்த்தருளினவர் ஆகவும், வலிமையும், திறமையும் கொண்டு வெள்ளானை, செய்த செயலிடத்து மிக்க அன்பு விரவியிருந்தமை கண்டு அதற்கு வீடு அருளியவர் ஆகவும், பத்தர்களுக்கு இன்னமுதம் ஆகவும் அடியேன் கண்டு உய்ந்தவாறு நன்றாம்.

கு-ரை: புத்தி - ஞானம்; சிலந்தி ஞான முடைத்தாயினமை, முன்னைப் பிறவித்தொடர்பினால் என்க. புதுப் பந்தர் - மக்களாற் செய்யலாகாத பந்தல்; வாய்நூலாற் செய்த பந்தல். 'பொதுப் பந்தர்' என்பது பாடம் அன்று. மேய்ந்த -மூடிய. சித்தி - பேறு; இவ்வாறு சிவபிரானுக்குத் திருத்தொண்டு செய்யப் பெற்றமை சிறந்த பேறாதல் அறிக. சிறப்பு - முன்னையினும் சிறந்த தொண்டு; அதுசிவபிரானுக்குப் பல இடங்களில் மாடக்கோயில் எடுத்தமை, 'சித்தியினால்அரசாளப் பெற்று, பின்னும் சிறந்த தொண்டு செய்ய சிவகணங்களுள் ஒன்றாகிஇன்புறுமாறு சேர்த்தருளினார்' என்க. இது, கோச்செங்கட் சோழநாயனாரதுவரலாறு; இதன் விரிவைத் திருத்தொண்டர் புராணத்துட் காண்க. திறல் - வலிமை.வித்தகம் - திறமை. வெள்ளானை, திறலும் வித்தகமும் உடையதாய்ச் செய்த அன்பாவது, சிலந்தி செய்த வாய் நூற்பந்தர் எச்சில் முதலிய இழிவுகளைஉடையது எனக்கருதி அதனை அழித்தொழித்துத் தூய நீரினால் ஆட்டி வழிபட்டமை. 'விரவியவாறு' என்பது கடைக் குறைந்து நின்றது. விரவுதல் - பொருந்துதல். 'சிலந்திக்கும் வெள்ளானைக்கும் அருளிய இவற்றானே, அவர் பத்தர்களுக்கு இன்னமுதாதல் நன்கறியப்படும்' என்றபடி.