| 2920. | உருகுமனத் தடியவர்கட் கூறுந் தேனை | | | உம்பர்மணி முடிக்கணியை உண்மை நின்ற | | | பெருகுநிலைக் குறியாளர் அறிவு தன்னைப் | | | பேணியஅந் தணர்க்குமறைப் பொருளைப்பின்னும் | | | முருகுவிரி நறுமலர்மேல் அயற்கும் மாற்கும் | | | முழுமுதலை மெய்த்தவத்தோர் துணையை வாய்த்த | | | திருகுகுழல் உமைநங்கை பங்கன் தன்னைச் | | | செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. | 3 |
பொன்னிறமாய் இருந்தது' என்றலுமாம். அழல் வடிவினனை, 'அழல்' என்றது, பான்மை வழக்கால். மங்க - கெடும்படி. நக - (கண்) மலர; இனி, 'மங்கினமையால்மகிழ' என்றலுமாம்; இப்பொருள், பிறர் அநங்கனால் வருந்துதல் அல்லது மகிழமாட்டாமையை விளக்கும். தான், அசைநிலை, மருந்து - அமுதம்; இஃது அநங்கனையும் பின்னர் உயிர்ப்பித்தமை நினைக. 'கயிலை மாமலைமேல் சென்றுகாணற் பாலனாகிய அவனை இங்குத் திருச்செங்காட்டங்குடியில் கண்டேன்' என்பது நயம். 3. பொ-ரை: நினைந்துருகும் அடியாருடைய மனத்தில் ஊற்றெடுக்கும் தேன் ஆனவனும், தேவர்களுடைய மணிகள் இழைத்த மகுடங்களுக்கு அணியாய் நிற்கும் திருவடிகளை உடையவனும், உண்மைக் கண்ணே நின்றாராய் உயர்ந்தோர் கூறும் உறுதிச் சொற்களை ஏற்றுப் பெருகுநிலையாகிய வீடு அடைதலையே குறிக்கோளாய்க் கொண்டவருடைய அறிவாய் விளங்குபவனும், தன்னை விரும்பித் தொழும் அந்தணருக்கு விளங்கித் தோன்றும் மறைப் பொருள் ஆனவனும், பிற்படுவோராம் மணங்கமழும் தாமரை மலர் மேல் விளங்கும் பிரமனுக்கும் திருமாலுக்கும்முற்பட்ட பரமகாரணன் ஆனவனும், மெய்யான தவத்தைச் செய்வார்க்கு அமைந்த உறுதுணைவனும், சுருண்ட குழலினையுடைய உமைநங்கைக்கு வாய்த்த பங்கனும் ஆகியசிவபெருமானைச் செங்காட்டங்குடியில் நான் கண்டேன். கு-ரை: ஊறும் - (உருகுகின்ற அம்மனத்தின்கண்) சுரக்கின்ற. மணிமுடி - மணிகள் இழைத்த மகுடங்கள். 'உண்மைக் கண்ணே நின்ற குறி' என இயைக்க, உண்மைக் கண்ணேநிற்றல், மெய்ப்பொருளை உணர்தல் ஒன்றிலே நிலைபெறுதல். குறி -குறிக்கோள். இக் குறிக்கோளை உடையவர், தாம் தம் சிற்றறிவுகொண்டு கண்டவாறே கண்டு சிறுகி நில்லாது உயர்ந்தோர் கூறும் உறுதிச் சொல்லை ஏற்றுப் பெருகிச் செல்வர் ஆகலான், அவரை,
|