| 2921. | கந்தமலர்க் கொன்றையணி சடையான் தன்னைக் | | | கதிர்விடுமா மணிபிறங்கு கனகச் சோதிச் | | | சந்தமலர்த் தெரிவை யொரு பாகத்தானைச் | | | சராசரநற் றாயானை நாயேன் முன்னைப் | | | பந்தமறுத் தாளாக்கப் பணிகொண் டாங்கே | | | பன்னியநூல் தமிழ்மாலை பாடு வித்தென் | | | சிந்தைமயக் கறுத்ததிரு வருளினானைச் | | | செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. | 4 |
'பெருகுநிலைக் குறியாளர்' என்று அருளிச் செய்தார். அவர்க்குச் சிவபிரான் அவ்வந் நிலையிலும் அவ்வவ்வறிவாய் நின்று முன்னை அறியாமையை அகற்றியருளுதல் பற்றி, அவனை அவரது அறிவாக அருளிச் செய்தார். தன்னையே விரும்பித் தொழுகின்ற மேலாய அந்தணர்கட்கு வேதப் பொருளை ஐயமறத் தெளிவித்தருளுதலின், "பேணிய அந்தணர்க்கு மறைப் பொருளை" என்றருளினார். இதனைச் சனகர் முதலிய நால்வர்க்கு அருளியவாற்றால் அறியலாகும். முழுமுதல் - மேலான காரணம். சில கற்பங்களில் அயனைத் திருமால்தோற்றுவித்தலும், மற்றும் சில கற்பங்களில் திருமாலை அயன்தோற்றுவித்தலும் எக்கற்பத்திலும் அவர் இருவருள் ஒருவரை முன்னே சிவபிரான்தோற்றுவித்தலும் கூறப்படுதலால், இருவர்க்கும் பரமகாரணன்சிவபெருமானேயாதல் அறிக. 'அடியவர்கட்கு இன்பப் பொருளாகியும்,அமரர்கட்குத் தலைவனாகியும், உண்மைகாணும் உள்ளம் உடையவர்க்கு ஞானமாகியும், சீரிய அந்தணர்க்கு ஞானாசிரியனாகியும், அயன் மால்கட்குப் பரம காரணனாகியும், உண்மைத் தவத்தோர்க்கு உற்ற துணைவனாகியும், உமையம்மைக்குக் கணவனாகியும் நிற்பவன்' என்றருளிச் செய்தவாறு அறிக. 4. பொ-ரை: மணங்கமழும் கொன்றை மலரையணிந்த சடையானும் சிறந்த மரகதமணி உமிழும் ஒளியுடனே விளங்கும் பொன்னின் ஒளிபோல அழகிய மலரணிந்த உமையின் ஒருபாகத்தொடு தன் பாகம் விளங்கு பவனும், இயங்குதிணை நிலைத்திணைப் பொருள்களுக்கு நற்றாய் ஆனவனும், நாயேனுடைய பழைய வினையை அறுத்து அடிமை கொள்ள என் தொண்டினை மதித்துக் கொண்டாற் போல முன்னையோர் உரைத்தஇலக்கண நெறியின் அமைந்த தமிழ் மாலையை யான் பாடச் செய்து அதனால் என்மனத்துமண்டிய மயக்கத்தைப் போக்கிய திருவருளைச் செய்தவனும் ஆகியசிவபெருமானை நான் செங்காட்டங்குடியில் கண்டேன்.
|