| 2922. | நஞ்சடைந்த கண்டத்து நாதன் தன்னை | | | நளிர்மலர்ப்பூங் கணைவேளை நாச மாக | | | வெஞ்சினத்தீ விழித்ததொரு நயனத் தானை | | | வியன்கெடில வீரட்டம் மேவி னானை | | | மஞ்சடுத்த நீள்சோலை மாட வீதி | | | மதிலாரூர் இடங்கொண்ட மைந்தன் தன்னைச் | | | செஞ்சினத்த திரிசூலப் படையான் தன்னைச் | | | செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. | 5 |
கு-ரை: கந்தம் - நறுமணம். "மணி" என்றது, மரகதத்தை. 'மரகதமணியின் ஒளியோடு விளங்குகின்ற பொன்னொளிபோல, தெரிவையை ஒரு பாகத்தில் உடையவன்' என்க; "மரகதக்குவாஅல் மாமணிப் பிறக்கம் - மின்னொளி கொண்ட பொன்னொளிதிகழ" என்று அருளியது திருவாசகமும் (தி.8 திருவண். 124. 152.) சந்தம் - அழகு. 'சர அசரங்கட்கு நற்றாய் போன்றவன்' என்க. 'நாயேனது முன்னைப் பந்தம்' என விரியும். "பந்தம்" என்றது, வினையை. ஆள் ஆக்கி - அடிமையாகச் செய்து. பணி - தொண்டு. நூல் தமிழ் - இலக்கண நெறியின் அமைந்த தமிழ். 5. பொ-ரை: நஞ்சுபொருந்திய கண்டத்தை உடைய தலைவனும் குளிர்ந்த மலர்களாகிய அழகிய அம்புகளைக் கொண்ட மன்மதன் அழியுமாறு கொடிய சினமாகிய நெருப்பு எழவிழித்த ஒரு நெற்றிக் கண்ணினனும், கெடில நதிக்கரையில் விளங்கும் பரந்த அதிகை வீரட்டம் மேவினவனும், மேகம் தவழும் நீண்ட சோலைகளை உடையதும் மாடவீதிகள் நிறைந்ததும் மதிலால் வளைப்புண்டது மாகிய ஆரூரைத் தனது இடமாகக் கொண்ட மைந்தனும், சினத்தால் சிவந்து தோன்றும் திரிசூலப் படையினனும் ஆகிய சிவபெருமானை நான் செங்காட்டங்குடியிற் கண்டேன். கு-ரை: நளிர் - குளிர்ச்சி. 'சினத் தீ எழ' என ஒரு சொல் வருவிக்க. கெடில வீரட்டம்- திருவதிகை வீரட்டம், மஞ்சு - மேகம். அடுத்த - பொருந்திய. சிவப்பை உண்டாக்குவதாய சினத்தை. 'செஞ்சினம்' என்றும், படையை உடையவனது சினத்தைப்படைமேல் ஏற்றியும், "செஞ்சினத்த திரிசூலப் படையான்" என்று அருளிச் செய்தார். இனிச் சிவபிரானது சினம் செம்மையிற் (திருவருளிற்)பிறழாமையின், "செஞ்சினத்த" என்று அருளினார் என்றலுமாம்.
|