பக்கம் எண் :

1179
 
2923.கன்னியையங் கொருசடையிற் கரந்தான் தன்னைக்

கடவூரில் வீரட்டங் கருதி னானைப்

பொன்னிசூழ ஐயாற்றெம் புனிதன் தன்னைப்

பூந்துருத்தி நெய்த்தானம் பொருந்தி னானைப்

பன்னியநான் மறைவிரிக்கும் பண்பன் தன்னைப்

பரிந்திமையோர் தொழுதேத்திப் பரனே யென்று

சென்னிமிசைக் கொண்டணிசே வடியி னானைச்

செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

6


2924.எத்திக்கு மாய்நின்ற இறைவன் தன்னை

ஏகம்பம் மேயானை யில்லாத் தெய்வம்

பொத்தித்தம் மயிர்பறிக்குஞ் சமணர் பொய்யிற்

புக்கழுந்தி வீழாமே போத வாங்கிப்

பத்திக்கே வழிகாட்டிப் பாவந் தீர்த்துப்

பண்டைவினைப் பயமான எல்லாம் போக்கித்

தித்தித்தென் மனத்துள்ளே ஊறுந் தேனைச்

செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

7


6. பொ-ரை: கங்கையைத் தன் ஒப்பற்ற சடையின் ஒரு பால் மறைத்தவனும், கடவூர்வீரட்டானத்தைச் சிறந்த இடமாகக் கருதினவனும், காவிரி சூழும் ஐயாற்றில்விளங்கும் எம் புனிதனும், பூந்துருத்தி நெய்த்தானம் ஆகிய பதிகளில்நிலைபெற்றவனும், தான் உரைத்த நான்மறைகளின் பொருளைத் தக்கவர்க்குவிளங்க விரித்து உரைக்கும் இயல்பினனும், தேவர்கள் அன்பு கொண்டுவணங்கிப் புகழ்ந்து 'பரனே' என்று முழங்கித் தம் தலைமீது அணியாகச் சூடிக்கொள்ளும் சிவந்த அடிகளை உடையவனும் ஆகிய சிவபெருமானை நான்செங்காட்டங்குடியில் கண்டேன்.

கு-ரை: "கன்னி" என்றது, கங்கையை. ஒரு சடை - ஒப்பற்ற சடை; அன்றி,மிகப்பெருகிவந்த கங்கை புல்நுனிமேல் நீர்போல் ஆயினமையின், 'ஒரு சடை'என்றே உரைத்தலுமாம். கடவூர் வீரட்டம், ஐயாறு, பூந்துருத்தி, நெய்த்தானம்சோழ நாட்டுத் தலங்கள், பொன்னி - காவிரி நதி. பரிந்து - அன்பு கொண்டு.