| நில்லாத நிணக்குரம்பைப் பிணக்கம் நீங்க | | | நிறைதவத்தை அடியேற்கு நிறைவித் தென்றுஞ் | | | செல்லாத செந்நெறிக்கே செல்விப் பானைச் | | | செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. | 8 |
அன்பனும், பிறர்க்குத் துன்பமிழைத்தலாகிய பிழைபட்ட நெறியை விரும்பினவருடைய புரங்கள் மூன்றும் அழிந்து விழுமாறு போர் செய்யவல்ல அம்பினைத் தொடுத்தவனும் நிலையற்ற புலாற்குடிலாகிய உடலிடத்து நரைதிரைமூப்புப் பிணி இறப்பு முதலியவற்றால் நிகழும் மாறுபாடு நீங்க நலங்கள் நிறைவதற்குரிய தவத்தை என்பால் செய்து வேறு இடத்திற்குக் கொண்டு செல்லாத செவ்விய நெறியிலே என்னைச் செலுத்து பவனும் ஆகிய சிவபெருமானைநான் செங்காட்டங்குடியில் கண்டேன். கு-ரை: உண்மை நூல்களைக் கல்லாதவர்க்கு இறையுணர்வு உண்டாதற்கு வாயில்இன்மையின், 'கல்லாதார் மனத்து அணுகாதவன்' என்றருளினார், இது பற்றியேதந்தை தாயர் தம் புதல்வர்க்கு உரிய பருவத்தே தீக்கை செய்வித்து இறைவன் நூல்களை ஓதுவித்தல் அவர்கட்கு இன்றியமையாக் கடனாயிற்று. "கல்லாநெஞ்சின் - நில்லான் ஈசன்" (தி.3. ப.40. பா.3.) என்று அருளினார், திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகளும். கண்ணப்பநாயனார் முதலியோர்க்குக் கல்வியின்றியும் இறையுணர்வு உண்டாயிற்றன்றோ' எனின், அவரெல்லாரும் முற்பிறப்பிற் கற்ற பெருங் கல்வியும், அக் கல்வியறிவின் பயனாக வாலறிவன் நற்றாளைத் தொழுத பெருந் தவமும் உடையார்' என்பதற்கு; அவர்க்கு உண்டாகிய உணர்வு தவத்தவர் உணர்வினும் மிக மேம்பட்ட உணர்வாய்க் கடிதின் வீடுபயந்தமை தானே போதிய சான்றாம் என்க. தி.12 கண்ணப்ப நாயனார்புராண(102)த்தில், சேக்கிழார் நாயனார், "முன்பு செய் தவத்தின் ஈட்டம் முடிவிலா இன்பமான - அன்பினை எடுத்துக் காட்ட" என்றருளினார். கண்ணப்பர்க்கு அன்னதொரு பெருந் தவம் இல்லையாயின், "சேணுயர் திருக்காளத்தி மலைமிசை எழுந்து செவ்வே - கோணமில் குடுமித் தேவர் இருப்பர் கும்பிடலாம்' என்று ஒருவன் கூறிய அளவில், மேவிய நெஞ்சும் வேறோர் விருப்புற அவர் விரைந்து செல்லுதலும், சென்று காளத்தி மலையை அடைந்த பொழுது தமக்கு முன்னே தம் அன்பு அம்மலை மேற் செல்லுதலும், சென்று தாம் இறைவரைக் காணாதமுன்பே இறைவர் தம்மை நோக்கிய கருணை கூர்ந்த அருட்டிருநோக்கம் வந்துஎய்தப் பெறுதலும், அது பெற்ற ஞான்றே தாம் பிறந்த குலச்சார்பு தம்மை அறவேவிட்டு அகன்று போகத் தாம் பொருவில் அன்பே உருவாதலும், பிறவும் எவ்வாறுஇயலும் என்க.
|