பக்கம் எண் :

1185
 

85. திருமுண்டீச்சரம்

பதிக வரலாறு:

சுவாமிகள், திருவெண்ணெய்நல்லூர், திருவாமாத்தூர் ,திருக்கோவலூர் வணங்கியபின் பிற பதிகளை வணங்கிப் பாடியருளியவற்றுள் ஒன்றுபோலும் இத்திருப்பதிகம். (தி.12 திருநாவு. புரா. 148.)

குறிப்பு: இத் திருப்பதிகம், திருமுண்டீச்சரப் பெருமானது பெருமைகளைக் 'காண்' என்னும் முடிபுடைய தொடர்களால் வகுத்துரைத்து. 'அவன்' என் சிந்தையிடத்தவனாயினான்' என மகிழ்ந்தருளிச் செய்தது.

திருத்தாண்டகம்

ப. தொ. எண்: 298

பதிக எண்: 85

திருச்சிற்றம்பலம்

2928.ஆர்த்தான்காண் அழல்நாகம் அரைக்கு நாணா

அடியவர்கட் கன்பன்காண் ஆனைத் தோலைப்

போர்த்தான்காண் புரிசடைமேல் புனலேற் றான்காண்

புறங்காட்டி லாடல் புரிந்தான் தான்காண்

காத்தான்காண் உலகேழுங் கலங்கா வண்ணங்

கனைகடல்வாய் நஞ்சதனைக் கண்டத் துள்ளே

சேர்த்தான்காண் திருமுண்டீச் சரத்து மேய

சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.

1


1. பொ-ரை: திரு முண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவலோகன், சினமிகுந்த நாகத்தை அரைநாணாகக் கட்டியவனும், அடியவர்களுக்கு அன்பனும், யானையின் தோலைப் போர்வையாகக் கொண்டவனும், முறுக்குண்ட சடைமேல் கங்கையை ஏற்றவனும், சுடுகாட்டில் ஆடுவதை விரும்பியவனும், உலகங்கள் ஏழும் கலக்க முறாதபடி ஒலிக்கும் கடலிடை உண்டான நஞ்சினைத் தன் கழுத்திடத்தே சேர்த்தவனும் ஆவான். அவன் என் சிந்தை இடத்தவன் ஆயினான்.

கு-ரை: ஆர்த்தான் - கட்டினான். "அழல்" என்றது, சினத்தை. 'நாணா ஆர்த்தான்' எனவும், 'கலங்கா வண்ணங் காத்தான்' எனவும் இயையும்.