| 2929. | கருத்தன்காண் கமலத்தோன் தலையி லொன்றைக் | | | காய்ந்தான்காண் பாய்ந்தநீர் பரந்த சென்னி | | | ஒருத்தன்காண் உமையவளோர் பாகத் தான்காண் | | | ஓருருவின் மூவுருவாய் ஒன்றாய் நின்ற | | | விருத்தன்காண் விண்ணவர்க்கும் மேலா னான்காண் | | | மெய்யடியா ருள்ளத்தே விரும்பி நின்ற | | | திருத்தன்காண் திருமுண்டீச் சரத்து மேய | | | சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே. | 2 |
"கடல்வாய் நஞ்சதனைக் கண்டத்துள்ளே சேர்த்தான்" என்றது, 'பெரியகடலில் தோன்றிய நஞ்சினைச் சிறிய கண்டத்துள்ளே அடக்கினான்' என்னும் நயத்தை உடையது. சிவலோகன் - சிவ லோகத்தைத் தன் உலகமாக உடையவன். 'சிவலோகத்தில் இருப்பவன் என் சிந்தையன் ஆயினான்' என வியந்தருளிச் செய்தவாறு. 2. பொ-ரை: திருமுண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவலோகன் தலைவன் ஆவானும், பிரமன் தலைகளில் ஒன்றைக் கோபித்துக் கொய்தவனும், வேகமாகப் பாய்ந்த கங்கை வேகம் நீங்கிப் பரவிய தலையை உடைய ஒருத்தனும் உமையம்மை தங்கிய பங்கினனும், மூன்று வடிவங்களாய் நின்ற அரி, அயன், அரன் ஆகியோருடைய வடிவங்கள் ஒன்றாகித் தனது ஒருவடிவமாக அமைந்த பழையோனும், தேவர்களுக் கெல்லாம் மேலானவனும், மெய்யடியார் உள்ளத்தில் விரும்பி உறையும் தூயவனும் ஆவான். அவன் என் சிந்தையிடத்தவன் ஆயினான். கு-ரை: கருத்தன் - தலைவன். "காய்ந்தான்" என்றது, அறுத்தான்' என்னும் தன்காரியம் தோற்றி நின்றது. பாய்ந்த - வீழ்ந்த. பரந்த - நிறைந்த. மூவுரு -"அயன், அரி, அரன்" என்னும் முக்கடவுளர் வடிவம். "மூவுருவாயும் "என்னும் உம்மை தொக்கது. "விருத்தன்" என்றது, 'பழையோன்' என்றவாறு. மூவுருவாய் நிற்றல் பொது வியல்பாக, ஒன்றாய் நிற்றலே உண்மை இயல்பாகலின், 'ஒன்றாய் நின்ற விருத்தன்' என்றருளினார். "மூவுருவாய்" என்புழித் தொகுக்கப்பட்ட உம்மை, 'இப் பொதுவியல்பு உடையனாயினும் தன் உண்மையியல்பு திரியாதவனே' என்பது தோற்றுவித்தது. 'தீர்த்தன் என்னும வடசொல். "திருத்தன்" எனத் திரிந்து நின்றது.
|