பக்கம் எண் :

1187
 
2930.நம்பன்காண் நரைவிடையொன் றேறி னான்காண்

நாதன்காண் கீதத்தை நவிற்றி னான்காண்

இன்பன்காண் இமையாமுக் கண்ணி னான்காண்

ஏசற்று மனமுருகும் அடியார் தங்கட்

கன்பன்காண் ஆரழல தாடி னான்காண்

அவனிவனென்றியாவர்க்கும் அறிய வொண்ணாச்

செம்பொன்காண் திருமுண்டீச் சரத்து மேய

சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.

3

2931.மூவன்காண் மூவர்க்கும் முதலா னான்காண்

முன்னுமாய்ப் பின்னுமாய் முடிவா னான்காண்

காவன்காண் உலகுக்கோர் கண்ணா னான்காண்

கங்காளன் காண்கயிலை மலையி னான்காண்


3. பொ-ரை: திரு முண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவலோகன் நம்புதற்குரியவனும், வெள்ளை விடை ஒன்றை ஊர்தியாகக் கொண்டவனும், தலைவனும், கீதத்தைப் பாடினவனும், இன்பத்தைத் தருபவனும், இமையாத மூன்று கண்கள் உடையவனும், விரும்பி மனமுருகும் அடியார்களுடைய அன்பனும், அனலேந்தி ஆடினவனும், அவன் என்றும் இவன் என்றும் யாராலும் அறிய ஒண்ணாதவனும், செம்பொன் அனையானும் ஆவான். அவன் என் சிந்தையிடத்தவன் ஆயினான்.

கு-ரை: நம்பன் - நம்புதற்கு (விரும்புதற்கு) உரியவன். நரை - வெண்மை. நவிற்றினான் -பாடினான். இன்பன் - இன்பம் தருபவன். 'சிவபிரானது முக்கண்களும் இமையாக்கண்கள்' என்பதனை, "இமையா முக்கண் மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்" (தி.11 திருமுருகாற்றுப்படை. 153. 54.) என நக்கீரதேவரும் கூறினார். ஏசற்று - விரும்பி. "அழலது" அது, பகுதிப் பொருள் விகுதி. "அவன் என்றுஅறிய ஒண்ணாதவன்" என்றது, 'கருதியும் கேட்டும் உணர ஒண்ணா தவன்' என்பதனையும், "இவன் என்று அறிய ஒண்ணாதவன்" என் றது. 'கண்டு உணரஒண்ணாதவன்' என்பதனையும் குறித்து நின்றன.

4. பொ-ரை: திருமுண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவலோகன் மூவுருவாய் மூத்தவனும், மூவர்க்கும் முதல் ஆனவனும்,