பக்கம் எண் :

1190
 
2934.உதைத்தவன்காண் உணராத தக்கன் வேள்வி

உருண்டோடத் தொடர்ந்தருக்கன் பல்லை யெல்லாந்

தகர்த்தவன்காண் தக்கன்றன் தலையைச் செற்ற

தலைவன்காண் மலைமகளாம் உமையைச் சால

மதிப்பொழிந்த வல்லமரர் மாண்டார் வேள்வி

வந்தவியுண் டவரோடு மதனை யெல்லாஞ்

சிதைத்தவன்காண் திருமுண்டீச் சரத்து மேய

சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.

7


(தி.8 திருவா. பிடித்த.1.) எனவும் அருளியவற்றை நோக்குக. உலப்பு - அழிவு."ஆடை" என்றது, ஆடையின்மேற் கட்டப்படும் கச்சினை. 'புறங்காட்டில் எரியின்கண் ஆடல் புரிந்தான்' என்க. நற்றவன் - நல்ல தவக்கோலம் உடையவன். "நற்றவனாய் அடியடைந்த மாணிக்கு' என்பதும் பாடம், மாணி -பிரமசாரி; மார்க்கண்டேயர்.

7. பொ-ரை: திரு முண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவலோகன், மெய்யுணராத தக்கனுடைய வேள்விக்கண் திரட்டி வைக்கப்பட்ட திரவியங்களை உருண்டோட உதைத்தவனும், அருக்கனைத் தொடர்ந்து சென்று அவன் பற்களை எல்லாம் தகர்த்தவனும், தக்கனுடைய தலையைக் கொய்த தலைவனும், மலைமகளாகிய உமையம்மையை மிக இகழ்ந்தவராய், மாட்சிமைப்பட்டவராய்த் தம்மை மதித்து வேள்விக்கண்வந்து அவியுண்டாருமாகிய வலிமைமிக்க தேவர்களொடு அவர்தம் அறியாமை முழுவதையும் அழித்தவனும் ஆவான். அவன் என் சிந்தையிடத்தவன் ஆயினன்.

கு-ரை: "வேள்வி" என்றது, வேள்வியின்பொருட்டு நிறைந்து வைக்கப்பட்ட பொருள்களை. உருண்டோட உதைத்தவன் என இயையும். தொடர்ந்து - துரந்து சென்று.அருக்கன் - சூரியன். 'சால ஒழிந்த' என இயையும்.

'மாண்டாராய்' என எச்சமாக்கி, 'மாட்சிமைப்பட்டவராய் வேள்விக்கண் வந்து அவியை உண்டவர்' என உரைக்க. "வந்து" என்றது, இடவழுவமைதி. "வல்லமரர் உண்டவரோடு" என்றது, 'உண்டவராகிய வல்லமரரோடு' எனப் பொருள் தந்தது. ஓடு எண்ணிடைச்சொல். மதன் - அறியாமை. 'அவரது மதனை எல்லாம்' என்க. சிதைத்தவன் - அழித்தவன்.