| 2935. | உரிந்தவுடை யார்துவரால் உடம்பை மூடி | | | உழிதருமவ் வூமரவர் உணரா வண்ணம் | | | பரிந்தவன்காண் பனிவரைமீப் பண்ட மெல்லாம் | | | பறித்துடனே நிரந்துவரு பாய்நீர்ப் பெண்ணை | | | நிரைந்துவரும் இருகரையுந் தடவா வோடி | | | நின்மலனை வலங்கொண்டு நீள நோக்கித் | | | திரிந்துலவு திருமுண்டீச் சரத்து மேய | | | சிவலோகன்காண் அவனென் சிந்தை யானே. | 8 |
8. பொ-ரை: திரு முண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவலோகன், உடை இல்லாதவரும், துவர் தோய்ந்த ஆடையால் உடம்பை மூடுபவராய்த் திரியும் சமண புத்தர்கள் உணராவண்ணம் தன் அடியார்க்கு அருள் புரிந்தவன் ஆவான். குளிர்ந்த மலைமேல் உள்ள பண்டங்களை யெல்லாம வாரிக்கொண்டு அவற்றோடு கூட முறைப்பட்டு வரும் பெண்ணையாற்றில் பாய்ந்துவரும் நீர், இணை ஒத்துவரும் இருகரைகளையும் தடவிக்கொண்டு ஓடிக்குற்றமற்ற இறைவனை வலங்கொண்டு இடமும் காலமும் நெடியவாக நோக்கி, மெல்ல அசைந்துலவும் அவன் என் சிந்தையிடத்தவன் ஆயினன். கு-ரை: உரிந்த உடையார் - நீங்கிய உடையினை யுடையவர்; உடை இல்லாதவர்; சமணர். துவர் - துவர் தோய்த்த ஆடை; அதனால் உடம்பை மூடுபவர், புத்தர். உழிதரும் - திரிகின்ற. ஊமர் - உணர் வில்லாதவர், பரிந்தவன் - (தன் அடியார்க்கு) அருள் புரிந்தவன் 'சமணரும் புத்தரும் இறைவனை இல்லை என்றே சொல்லிக் காலம் போக்கினும் அவன் தன் அடியார்க்கு அருள் செய்தே நிற்கின்றான்' என்றதாம்; 'புத்தரும் சமணரும் புறனுரைக்கப் - பத்தர்கட் கருள் செய்து பயின்றவனே" (தி.3. ப.4. பா.10.) என்றருளினார், திருஞான சம்பந்தமூர்த்தி சுவாமிகள். பனி வரை மீப்பண்டம் - குளிர்ந்த மலைகளின் மேல் உள்ள பொருள்கள்; அவை, சந்தனம், அகில், மூங்கில் முதலியன. பறித்து - வாரிக்கொண்டு; 'பரித்து' என்பதும் பாடம். உடன் - அவற்றோடு கூட. நிரந்து - முறைப்பட்டு. 'பெண்ணைப் பாய்நீர்' என மாற்றுக. நிரைந்து - இணையொத்து. தடவா - தடவிக்கொண்டு. "நின்மலனை" என்றது, 'நின்மலனாகிய தன்னை' எனப் பொருள் தந்தது. 'நீள நோக்கி' இடம் நெடிதாக நோக்கி; 'நோக்குவதும் நின்மலனையே' என்க. 'அணித்தாய் ஓடும் பெண்ணையாற்று நீரினை, இறைவனை வலம் செய்து கண்டு கொண்டே ஓடுவதாக அருளிச் செய்தார்' என்க.
|