பக்கம் எண் :

1192
 
* * * * * * * 9

2936.அறுத்தவன்காண் அடியவர்கள் அல்ல லெல்லாம்

அரும்பொருளாய் நின்றவன்காண் அனங்க னாகம்

மறுத்தவன்காண் மலைதன்னை மதியா தோடி

மலைமகள்தன் மனம்நடுங்க வானோ ரஞ்சக்

கறுத்தவனாய்க் கயிலாய மெடுத்தோன் கையுங்

கதிர்முடியுங் கண்ணும் பிதுங்கி யோடச்

செறுத்தவன்காண் திருமுண்டீச் சரத்து மேய

சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.

10

திருச்சிற்றம்பலம்


இதனை அடுத்து நின்ற திருத்தாண்டகம் கிடைக்கவில்லை. இதன் பின் இறுதித் திருத்தாண்டகமே கிடைத்துள்ளது.

9. * * * * * * * * * *

10. பொ-ரை: அடியார்களுடைய அல்லல்களை யெல்லாம் நீக்கியவனும், அடைவதற்கு அரிய பொருளாய் நின்றவனும், மன்மதனது உடலை அழித்தவனும், மலைமகளாம் உமையம்மையின் மனம் நடுங்கவும் தேவர்கள் அஞ்சவும் கயிலை மலையை மதியாது வெகுண்டு ஓடி அதனைப் பறித்தெடுக்க முற்பட்டவனுடைய கைகளும் ஒளிவீசும் முடிகளை உடைய தலைகளும் கண்களும் பிதுங்கிச் செருக்குக்கெடுமாறு ஒறுத்தவனும், திருமுண்டீச்சரத்துக் கோயில் கொண்ட சிவலோகன் ஆவான். அவன் என் சிந்தையிடத்தவன் ஆயினன்.

கு-ரை: 'அல்லல் எல்லாம் அறுத்தவன்' என்க. "அரும் பொருளாய் நின்றவன்" என்றது, அடைந்த பின்னரும், அடைந்தார்க்கு இன்பம் மேன்மேல் விளைத்தலால், அன்னதொரு பொருள் பிறிதில்லாமை உணர நிற்றல் பற்றி. மறுத்தவன் - ஒழித்தவன். 'நடுங்கவும் அஞ்சவும் எடுத்தோன்' என்க. கறுத்தல் - வெகுளல். கதிர் முடி - மகுடத்தால் ஒளிபெற்ற தலை. பிதுங்கி - பிதுங்கினமையால். ஓட - (செருக்குக்) கெட.