| 2939. | உருமூன்றாய் உணர்வின்கண் ஒன்றா னானை | | | ஓங்கார மெய்ப்பொருளை உடம்பி னுள்ளால் | | | கருவீன்ற வெங்களவை யறிவான் தன்னைக் | | | காலனைத்தன் கழலடியாற் காய்ந்து மாணிக் | | | கருளீன்ற ஆரமுதை அமரர் கோனை | | | யள்ளூறி யெம்பெருமான் என்பார்க் கென்றுந் | | | திருவீன்ற தென்பரம்பைக் குடியின் மேய | | | திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே. | 3 |
"இதெல்லாம்" என்றதற்கு, 'இக் கோலத்தை எல்லாம்' என உரைக்க. பரித்தான் - மேற்கொண்டு நிற்பவன். 'உண்டதெல்லாம்' எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். பாம்பணையான் - திருமால். ஆழி - சக்கரம். சிரித்தான் - மகிழ்ச்சியுற்றான்; என்றது, 'அருள்பண்ணினான்' என்றபடி. 3. பொ-ரை: அயன், அரி, அரன் என்னும் நிலைகளால் மூவுருவாகியும் உண்மையை உணருமிடத்து அம்மூவுருவம் ஓருரு ஆனவனும், ஓங்காரத்தின் மெய்ப்பொருளாய்த் திகழ்பவனும், உடம்பின் உள்ளே கருவாய்த் திகழும் மனம் எண்ணும் வஞ்சனையான கொடிய எண்ணங்களை அறிபவனும், இயமனைக் கழலணிந்த தன் திருவடியால் உதைத்து மாணியாகிய மார்க்கண்டேயனுக்கு அருள் செய்த பெறுதற்கரிய அமுது அன்னவனும், தேவர்களுக்குத் தலைவனும் அன்புமிகப் பெருகி எம்பெருமானே என்று விளித்து அடி அடைவார்க்கு என்றும் நன்மைகளை உண்டாக்குபவனும் ஆகிய தென்பரம்பைக் குடியைச் சார்ந்த திருவாலம் பொழிற் சிவபெருமானை நெஞ்சே இடைவிடாது சிந்திப்பாயாக. கு-ரை: உருமூன்று - 'அயன், அரி, அரன்' என்னும் நிலைகள், உணர்வின்கண் - உண்மையை உணருமிடத்து. ஓங்காரத்து மெய்ப்பொருள், எப்பொருளின் தோற்றம் நிலை இறுதிகட்குக் காரணன் என்பது. "உடம்பு" என்றது பருவுடம்பையாகலின், "கரு" என்றது, அதற்கு முதலாய் உள்ள நுண்ணுடம்பாகிய மனத்தை என்க. 'அஃது ஈன்ற வெங்களவு' என்றது, வஞ்சனையாகிய எண்ணத்தை. அதனை உடம்பினுள்ளால் ஈன்ற என்றது பருவுடம்பு போலப் புலனாகாது நிற்றல் பற்றி, "அருள் ஈன்ற" என்றது, 'அருளை அவன் பொருட்டு ஆக்கிய' என்றபடி, அள் ஊறி - அன்புமிகப் பெருகி. திரு - நன்மை.
|