| 2951. | பாரவன்காண் பாரதனிற் பயிரா னான்காண் | | | பயிர்வளர்க்குந் துளியவன்காண் துளியில் நின்ற | | | நீரவன்காண் நீர்சடைமேல் நிகழ்வித் தான்காண் | | | நிலவேந்தர் பரிசாக நினைவுற் றோங்கும் | | | பேரவன்காண் பிறையெயிற்று வெள்ளைப் பன்றிப் | | | பிரியாது பலநாளும் வழிபட் டேத்தும் | | | சீரவன்காண் சீருடைய தேவர்க் கெல்லாஞ் | | | சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே. | 6 |
சினையை முதலொடு சார்த்தி முடித்தருளினார். துளங்கும் - ஒளி விளங்குகின்ற. தீயவன் - தீயாய் இருப்பவன். "சிறுமான் பெருமான்" என்றது, முரண் தொடை நயம், ஆய் - தாய்; 'யாய்' என்பதன் மரூஉ; 'தாய்போன்றவன்' என்பது பொருள். அகரம், சாரியை. 'ஆரூரில் ஆயவன்' என மாற்றி உரைப்பினும் ஆம். 'அடியார்கட்கு' என்றமையால். "சேயவன்" என்றது, மற்றையோர்க்கு என்பது பெறப்படும். சேயவன் - சேய்மையில் உள்ளவன். சேமநெறி - பாதுகாவலான நெறி. 6. பொ-ரை: சிவபுரத்தெம் செல்வனாம் சிவபெருமான், விளைநிலமானவனும், விளைநிலத்தில் பயிரானவனும், பயிரை வளர்க்கும் மழையானவனும், அம்மழைத்துளியில் நின்ற நீரானவனும், தன் சடைமேல் நீர்நிற்கச் செய்தவனும், நிலவேந்தர் தம் ஆட்சியால் தாம் பெறும் பரிசாகத் தம் மனத்தில் எஞ்ஞான்றும் நினைக்குமாறு ஓங்கும் புகழானவனும், பிறை போன்ற விளைந்த பல்லினை உடைய வெள்ளைப் பன்றியாகிய திருமால் இந்நகரின் நீங்காது பலநாளும் வழிபட்டு வணங்கும் புகழினனானவனும், சிறப்புடைய தேவர் எல்லாருக்கும் இன்பக் காரணன் ஆனவனும் ஆவான். கு-ரை: "பார்" என்றது, விளைநிலத்தை, துளி - மழை. பேர் - பெயர்; புகழ். "இறைகடியன்" என்று குடிகள் உரைக்கும் இன்னாச் சொல் (குறள் - 564.) இன்றி, "செங்கோலன்' எனக் கூறும் சொல்லையே நிலவேந்தர் தம் ஆட்சியாற் பெறும் பரிசாகத் தம் மனத்தில் எஞ்ஞான்றும் நினைதலின், அதனை, "நிலவேந்தர் பரிசாக நினைவுற்று ஓங்கும் பேர்" என்று அருளிச் செய்தார். 'அவர் நினைவின்கண் உற்று ஓங்கும் பேர்' என்க. பெயலும் விளையுளும் தொக்கு இயல்புளிக் கோல் ஓச்சும் மன்னவர் நாட்டவாகச் செய்து, (குறள். 545,) அவர்க்கு மேற் கூறிய பரிசைப் பெறுவிப்பவன் இறைவனாதல் பற்றி, அவனை இவ்வாறு அருளிச்செய்தார். "மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானை" (தி.8 திருவாசகம் - திருவம்மானை. 10.) என்பதும் காண்க.
|