பக்கம் எண் :

1207
 

இதனானே, சிவபிரான் திருக்கோயில் வழிபாடுகள் விழாக்கள் முதலியவற்றை நன்கு காத்தல் நிலவேந்தர்க்கு முதற் கடமையாதலும் பெறப்பட்டது. "வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் - வீழ்க தண்புனல்" என, அந்தணரையும் தேவரையும் ஆனினத்தையும் மழையையும் வாழ்த்தியருளிய ஆளுடைய பிள்ளையார், "வேந்தனும் ஓங்குக" (தி.3. ப.54. பா.1.) என அரசனை வாழ்த்தியருளியதூஉம் இது பற்றி என்பதனை, "ஆளும் மன்னனை வாழ்த்திய தர்ச்சனை மூளும் மற்றிவை காக்கும் முறைமையால்" (தி.12 திருஞான. புரா. 822) எனச் சேக்கிழார் நாயனார் விளக்கியருளினார். 'இது செய்யாத அரசன் தானும் கேடுற்றுத் தன் நாட்டினையும் கேடுறச் செய்வான்' என்பதனைத் திருமூல நாயனார் திருமந்திரத்துள்,

"ஆற்றரு நோய்மிக் கவனி மழையின்றிப்
போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்
கூற்றுதைத் தான்திருக் கோயில்க ளானவை
சாற்றிய பூசைகள் தப்பிடிற் றானே"

எனவும்,

"முன்னவ னார்கோயில் பூசைகள் முட்டிடின்
மன்னர்க்குத் தீங்குள வாரி வளங்குன்றும்
கன்னங் களவு மிகுத்திடுங் காசினி
என்னரு நந்தி எடுத்துரைத் தானே"

எனவும் அருளிச் செய்தார்.

பிறை எயிறு - பிறைபோன்ற கோரப் பல். வெள்ளைப் பன்றி - சுவேத வராகம்; இது திருமால் கொண்ட வடிவம். திருமால் இவ்வடிவத்துடன் நிலத்தை ஊழி வெள்ளத்திலிருந்து எடுத்து நிறுத்திய பின் இத் தலத்தில் சிவபெருமானை வழிபட்டனன் என்பது புராணம்.

"மதமிகு நெடுமுக னமர்வளை மதிதிக

ழெயிறத னுதிமிசை

இதமமர் புவியது நிறுவிய எழில்அரி

வழிபட அருள்செய்த

பதமுடை யவன்அமர் சிவபுரம்"